கிராமப்புற மக்களின் வறுமையை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட 'பிரஜா சக்தி' தேசிய திட்டத்தின் கீழ், நாடளாவிய ரீதியில் 1,000 அபிவிருத்தித் திட்டங்கள் நாளை செவ்வாய்க்கிழமை (02) ஆரம்பிக்கப்படவுள்ளதாக கிராமிய அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

சமூக அபிவிருத்திச் சபைகளினால் அடையாளம் காணப்பட்ட உற்பத்திப் பொருளாதாரம், உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாடு ஆகியவற்றிற்கு நேரடியாகப் பங்களிக்கும் திட்டங்களுக்காக 25,000 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், இத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நிதிகள் ஏற்கனவே அனைத்து மாவட்டங்களுக்கும் விடுவிக்கப்பட்டுள்ளன.

"ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் திட்டங்கள்" என்ற இந்த 'பிரஜா சக்தி' திட்டத்தின் பிரதான அங்குரார்ப்பண நிகழ்வு, நாளை காலை 9.00 மணிக்கு கம்பஹா மாவட்டத்தின் மஹர பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட அம்பகஸ்பிட்டிய பகுதியில் நடைபெறவுள்ளது.

இதேவேளை, மாவட்ட மட்டத்திலான பிரதான திட்டங்கள் அந்தந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளதுடன், அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளிலும் குறைந்தபட்சம் 03 முதல் 05 வரையிலான திட்டங்களை ஆரம்பிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

சமூக அபிவிருத்திச் சபைகளின் உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பங்காளர் நிறுவனங்களின் பங்களிப்புடன் இந்த திட்டங்கள் அனைத்தும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கிராமிய அபிவிருத்தி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.