இலங்கை முதல் உதவிச் சங்க  இந்துசமயத் தொண்டர் சபை இலங்கையில் நிரந்தர சாந்தி, சமாதானம், இனங்களுக்கு இடையே நல்லிணக்கம் நிலவ இறையருள் வேண்டி நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து காலிச்  சிவன் ஆலயம் வரை முன்னெடுக்கும் புனித திருத்தலத் தரிசன யாத்திரை வெள்ளிக்கிழமை (23.01.2026) காலை-07.45 மணியளவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய முன்றலிலிருந்து இலங்கை முதல் உதவிச் சங்க இந்துசமயத் தொண்டர் சபையின் தேசிய ஆணையாளர்  வை.மோகனதாஸ் தலைமையில்  ஆரம்பமானது.

தரிசன யாத்திரையை சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு.வேலன் சுவாமிகள் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார். இந்த யாத்திரையில் முப்பத்தைத்துக்கும் மேற்பட்ட அடியவர்கள் கலந்து கொண்டுள்ளனர். தரிசன யாத்திரையில் கலந்து கொண்டுள்ளவர்கள் பல்வேறு ஆலயங்களைத் தரிசித்தவாறு காலிச் சிவன் ஆலயத்தை அடைந்து நாளை ஞாயிற்றுக்கிழமை (25.01.2026) காலை -06 மணி முதல் அங்கு இடம்பெறும் திருவாசக முற்றோதல் நிகழ்வில் கலந்து கொள்வர்.