பிரஜாசக்தி எனும் நிகழ்ச்சி நிரலூடாக உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்களைப் பறிப்பதற்கு அரசு முயற்சி செய்து வருவதாக வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட மயிலிட்டிப் பொதுநூலகத்தின் தேசிய வாசிப்பு மாதத்துக்கான பரிசளிப்பு நிகழ்வும் இறுதி நிகழ்வும் அண்மையில் யாழ்.குரும்பசிட்டிப் பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில்,   

தற்போது பிரதேச சபைகளின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்காகவும், உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்களைப் பறிப்பதற்காகவும் தென்னிலங்கையினூடாகப் பிரஜாசக்தி என்ற நிகழ்ச்சி நிரலைக் கொண்டு வந்துள்ளனர். மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் காணப்படினும் தமது கட்சிசார் நபர்களை நியமித்து அவர்கள் மூலம் உள்ளூராட்சி மன்றச் செயற்பாடுகளை மேற்கொள்ளலாம் என்ற எண்ணப்பாடு தோற்றுவிக்கப்பட்டுள்ளது. மக்களாகிய நீங்கள் யாரிடமும் மண்டியிடத் தேவையில்லை. நேரடியாகப் பிரதேச சபையை அணுகி உங்களது பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

வலிகாமம் வடக்குப் பிரதேசசபைக்குட்பட்ட நான்கு உப அலுவலகங்களுக்கும் ஒவ்வொரு நூலகங்கள் உண்டு. ஏனைய மூன்று  நூலகங்கள் அதற்குரிய இடங்களில் சிறப்பாக இயங்கினாலும் மயிலிட்டி நூல்நிலையம் வசாவிளான் சந்தியில் இன்றளவும் விடுவிக்கப்படாமல் உள்ளது. குறிப்பாகத் தற்போது 2500 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப் பரப்பில் அதிக நிலப்பரப்பு மயிலிட்டி உப அலுவலகத்துக்குட்பட்டதாகும். அதிலும், வசாவிளான் வீதியூடாகப் பயணிக்க முடிந்தாலும் வசாவிளான் சந்தியிலுள்ள நூல்நிலையக் காணிக்குள் செல்லமுடியாத நிலையுள்ளது. நாம் பல்வேறு நிலைமைகளைக் காட்டிக் கொண்டாலும் எங்களுடைய மக்கள் துன்ப துயரங்களுடன் கிட்டத்தட்ட 36 வருடங்களாகத் தமது சொந்த மண்ணில் வாழமுடியாத துர்ப்பாக்கிய நிலையிலுள்ளனர். மக்கள் தமது சொந்த இடங்களுக்கு மீளச் செல்ல வேண்டும், மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

வசாவிளான் ஸ்ரீ வேலுப்பிள்ளை வித்தியாசாலைக்கு அருகாகச் செல்லும் வீதி விடுவிக்கப்பட்டாலும் அப் பாடசாலை இதுவரை விடுவிக்கப்படவில்லை. தற்போது வசாவிளான் மத்திய கல்லூரிக்குரிய இடத்தில் தற்காலிகமாக இயங்கினாலும் அப் பாடசாலையின் மாணவர்கள் வாசிப்பு மாதப் போட்டிகளில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். எமது எதிர்பார்ப்பும் இப் பாடசாலை மீண்டும் தமது சொந்த இடத்தில் மீளவும் இயங்க வேண்டும் என்பதேயாகும் எனவும் குறிப்பிட்டார்.