2027 ஆம் ஆண்டுக்கான பிரிக்ஸ் தலைமையை சீனா  பொறுப்பேற்றுள்ளது.2026 ஆம் ஆண்டுக்கான 18 ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாடு செப்டெம்பர் 12 மற்றும் 13 திகதிகளில் புது டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்தியாவின் தலைமையில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது.பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் முதல் நாள் கூட்டத்தில் 45 பக்க கூட்டுப் பிரகடனம் நிறைவேற்றப்பட்டுள்ளது.அவற்றுள் தீவிரவாதத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், ஒருதலைப்பட்சமான வரி விதிப்புகளைத் தவிர்க்க வேண்டும், அணு ஆயுத பதற்றத்தைத் தணிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கூட்டுப் பிரகடனத்தில் இடம்பெற்றுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தப் பிரகடனத்துக்கு மாநாட்டின் இறுதி நாளான 13 ஆம் திகதி  அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பிரிக்ஸ் மாநாட்டில் 2027 ஆம் ஆண்டு பிரிக்ஸ் தலைமைப் பொறுப்பு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டு அடுத்த ஆண்டு பிரிக்ஸ் மாநாடு சீனாவில் நடைபெறும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து இந்தியப் பிரதமர் மோடி தெரிவிக்கையில், “அடுத்த ஆண்டு பிரிக்ஸ் மாநாட்டை சீனா நடத்த உள்ளது. இதற்காக சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங்குக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். டெல்லி பிரிக்ஸ் மாநாட்டில் சீன ஜனாதிபதி கலந்து கொண்டதற்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.