வெல்லம்பிட்டி மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் கிலோகிராமுக்கும் அதிக ஹெரோயினுடன் பெண் ஒருவர் உட்பட இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.பொலிஸார் மேற்கொண்ட தனித்தனி போதைப்பொருள் தடுப்புச் சோதனை நடவடிக்கைகளின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொலன்னாவை பகுதியில் கடந்த புதன்கிழமை (16) மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, 8 கிராம் 600 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 51 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளைத் தொடர்ந்து, முல்லேரியா பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டை பொலிஸார் சோதனையிட்டனர். இதன்போது அங்கிருந்து மேலும் 1 கிலோகிராம் 42 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதேவேளை, புத்தளம் பொலிஸார் நேற்று வியாழக்கிழமை (17) மதுரகம பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 26 வயதுடைய இளைஞர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.மோட்டார் சைக்கிளில் 314 கிராம் 200 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளைக் கடத்திச் சென்றபோதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது சந்தேக நபர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் அவரிடமிருந்த கைப்பேசி என்பனவற்றைப் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.இச்சம்பவங்கள் தொடர்பில் வெல்லம்பிட்டி மற்றும் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.