மஹர சிறைச்சாலை மோதல் இது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் அல்ல. இது மோசமான நிர்வாகம், அலட்சியம் மற்றும் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் சிறைச்சாலை அமைப்பின் வெளிப்பாடாகும்.அரசாங்கம் தற்காலிகத் தீர்வுகளைத் தேடுவதை நிறுத்திவிட்டு, நிறுவன ரீதியான தோல்வியின் தெளிவான அறிகுறிகளைக் காட்டும் சிறைச்சாலை அமைப்பைச் சீரமைக்க உடன் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

மஹர சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் இடம்பெற்று சில வாரங்களில், இரண்டாவது சிறைச்சாலை கலவரம் இடம்பெற்றுள்ளது. இது இனி ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் அல்ல. இது மோசமான நிர்வாகம், அலட்சியம் மற்றும் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் சிறைச்சாலை அமைப்பின் வெளிப்பாடாகும்.

இது இனி ஒரு சம்பவத்தைப் பற்றியது மட்டும் அல்ல. இது மோசமான நிர்வாகம், தலைமையின்மை மற்றும் சீரழிய அனுமதிக்கப்பட்ட ஒரு சிறைச்சாலை அமைப்பைப் பற்றியது. நம் கண்முன்னே இந்த நெருக்கடி விரிவடைந்து கொண்டிருந்தாலும், சிறைச்சாலைகள் திணைக்களம் இன்றுவரை நிரந்தரமாக நியமிக்கப்பட்ட ஒரு ஆணையாளர் நாயகம் இன்றியே இயங்கி வருகிறது. இந்த முக்கியமான பதவி இன்னமும் ஏன் நிரந்தர நியமனம் வழங்கவில்லை.

கூடுதல் பாதுகாப்பை ஈடுபடுத்துவது ஒரு நாளைக்குச் சூழ்நிலையைக் கட்டுப்படுத்தலாம், ஆனால் அது பிரச்சினைக்குத் தீர்வாகாது. அளவுக்கு அதிகமான கைதிகளின் எண்ணிக்கை,போதிய வசதியின்மை,மோசமான சுகாதாரப் பராமரிப்பு மற்றும் அர்த்தமுள்ள மறுவாழ்வு இல்லாமை ஆகியவை அவசர கவனத்தைக் கோருகின்றன.

சிறைத்தண்டனை ஒரு நபரின் சுதந்திரத்தைப் பறிக்கிறதே தவிர, அவர்களின் கண்ணியத்தை அல்ல. அரசாங்கம் தற்காலிகத் தீர்வுகளைத் தேடுவதை நிறுத்திவிட்டு, நிறுவன ரீதியான தோல்வியின் தெளிவான அறிகுறிகளைக் காட்டும் சிறைச்சாலை அமைப்பைச் சீரமைக்க உடன் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.