மாரவில, கட்டுநேரிய - பேன்கட பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக பெண் ஒருவர் அவரது கணவனால் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) இரவு 11.40 மணியளவில் பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்துக்கு (119) கிடைத்த தகவலையடுத்து, மாரவில பொலிஸார் குறித்த வீட்டுக்கு விரைந்து சென்றுள்ளனர்.

இதன்போது, வீட்டின் படுக்கையறைக்குள் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் காணப்பட்டுள்ளது.

இக்கொலைச் சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய, இரண்டு பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்துள்ளார்.

நீண்டகாலமாக நிலவி வந்த குடும்பத் தகராறு காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கணவன் தனது மனைவியின் கழுத்தைக் கத்தியால் அறுத்துக் கொலை செய்துவிட்டு, வீட்டிலிருந்து தப்பியோடியுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் நீதவான் விசாரணைகள் இன்று திங்கட்கிழமை (02)  இடம்பெறவுள்ளதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக மாரவில வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்படவுள்ளது.

மேலும், தப்பியோடியுள்ள சந்தேக நபரைக் கைது செய்வதற்காக மாரவில பொலிஸார்  விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.