'தித்வா' சூறாவளி காரணமாக ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் கடுமையான மண்சரிவு அபாயத்துக்குள்ளான ஆதார வைத்தியசாலைகளின் தற்போதைய செயற்பாடுகள் மற்றும் மறுசீரமைப்பு பணிகள் குறித்து உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதிகள் குழுவினர் அண்மையில் விசேட கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன மற்றும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி வைத்தியர் ராஜேஷ் சம்பாஜிராவ் பாண்டவ் ஆகியோர் தலைமையிலான குழுவினரே இந்த மீளாய்வை முன்னெடுத்தனர். சவால்களுக்கு மத்தியிலும் தடையற்ற சேவையை வழங்கும் சுகாதார ஊழியர்களின் அர்ப்பணிப்பை இக்குழுவினர் வெகுவாகப் பாராட்டினர்.
மண்சரிவு அபாயம் காரணமாக பதுளை மாவட்டத்தின் ஸ்பிரிங்வெலி, சில்மியாபுர மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் லிந்துலை, வடக்கு மெதகும்புர ஆகிய ஆதார வைத்தியசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டு, மாற்று இடங்களுக்கு மாற்றப்பட்டிருந்தன. தற்போது இவ்வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெறும் பிரிவுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, வெளிநோயாளர் மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகள் மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அத்தோடு தனமல்வில ஆதார வைத்தியசாலை, எல்ல சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் டிக்கோயா மாவட்ட பொது வைத்தியசாலை ஆகியவற்றின் முன்னேற்றங்களும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டன. "இலங்கையை மீள கட்டியெழுப்பும்" தேசிய திட்டத்தின்கீழ், பெருந்தோட்ட, பின்தங்கிய பகுதியில் உள்ள மக்களுக்குப் பிரதான சேவையாற்றும் ஸ்பிரிங்வெலி வைத்தியசாலையின் மறுசீரமைப்புக்காக 148 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.
மேலும் பிரித்தானிய காலனித்துவ வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட லிந்துலை வைத்தியசாலை, போக்குவரத்து வசதிகள் குறைந்த தலவாக்கலை, அகரபத்தனை, டயகம போன்ற மலையகத் தோட்டப் பகுதி மக்களின் பிரதான சுகாதார மையமாக விளங்குவதால், உலக சுகாதார ஸ்தாபனம் இதன் மேம்பாட்டுக்கு விசேட அவதானம் செலுத்தியுள்ளது. இக்கண்காணிப்பு நிகழ்வில் மாகாண சுகாதார அதிகாரிகள் மற்றும் அமைப்பின் தொற்றா நோய் பிரிவின் குழுத் தலைவர் வைத்தியர் பாரூக் குரேஷி உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.