மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவாஞ்சிகுடி பிரதேசத்திலுள்ள கெல்பேஜ் வீட்டுத்திட்ட வீதியிலுள்ள மிளகாய்த் தோட்டமொன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை (19) மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் களுவாஞ்சிகுடியை சேர்ந்த 58 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தனது தோட்டத்தில் சனிக்கிழமை வரையும் வேலை செய்து விட்டு உறங்கிக் கொண்டிருந்த நபர் பலத்த காயங்களுடன் சடலமாக கிடப்பதனை அவதானித்த உறவினர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, இன்றையதினம் இரத்தம் தோய்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற நிலையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறித்த இடத்திற்குச் சென்ற களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.ரி.எம்.றியாஸ் தலைமையிலான பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
பின்னர் மட்டக்களப்பு உதவி பொலிஸ் அத்தியட்சகர் திலிப்குமார, பொலிஸ் தடயவில் பிரிவு, பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு, உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் குறித்த இடத்திற்குச் சென்று மேலதிக விடயங்களை ஆராய்து வருகின்றனர்.