அனர்த்த நிலைமைகளின் போது கிடைக்கப் பெற்ற நிதியை ராஜபக்ஷக்களை போன்று கொள்ளையடிக்கவில்லை. ரணிலை போன்று நண்பர்களுக்கு பகிர்ந்தளவில்லை.  மக்களுக்கு முறையாக பகிர்ந்தளித்துள்ளோம்.  பூகோள ரீதியில் தோற்றம்  பெற்ற நெருக்கடியை சிறந்த முறையில் ஜனாதிபதி முகாமைத்துவம் செய்துள்ளார். தோற்றம் பெற்றுள்ள நெருக்கடிகளின்  தாக்கத்துடன் மே 31 வரை சமாளித்து முன்னோக்கிச் செல்ல வேண்டும். எரிபொருள் விலை வெகுவிரைவில் குறைவடையும் என்று  முதல்வரும் அமைச்சருமான  பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (8) நடைபெற்ற நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

மத்திய கிழக்கு மோதல்களினால் தோற்றம் பெற்ற  தாக்கங்களால் ஏற்பட்ட நெருக்கடிகளை  அரசாங்கம் என்ற அடிப்படையில் முகாமைத்துவம் செய்துள்ளோம். பூகோள  நெருக்கடியால் இலங்கையில் மாத்திரம் தான் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டது என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு எதிர்க்கட்சியினர் கருத்துக்களை தெரிவிக்கிறார்கள். எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறோம். எடுக்கப்பட்ட கடுமையான தீர்மானங்களினால் தான் தற்போது எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பியுள்ளது.

மத்திய கிழக்கின் மோதல் நிலைமையை முகாமைத்துவம் செய்வதற்கு  ஜனாதிபதி ஆரம்பத்தில் இருந்து சகல  தரப்புக்களுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.அதன் பயனால் தான் நிலைமையை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்ய முடிந்துள்ளது.  நாட்டு மக்கள் யதார்த்தத்தை விளங்கிக் கொண்டுள்ளார்கள்.ஆனால் எதிர்க்கட்சியினர் தான் குறுகிய அரசியல் நோக்கங்களை முன்னிலைப்படுத்திக் கொண்டு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.

அனர்த்த நிலைமைகளின் போது கிடைக்கப் பெற்ற நிதியை ராஜபக்ஷர்களை போன்று கொள்ளையடிக்கவில்லை. ரணிலை போன்று நண்பர்களுக்கு பகிர்ந்தளவில்லை.  மக்களுக்கு முறையாக பகிர்ந்தளித்துள்ளோம்.  பூகோள ரீதியில் தோற்றம்  பெற்ற நெருக்கடியை சிறந்த முறையில் ஜனாதிபதி முகாமைத்துவம் செய்துள்ளார். தோற்றம் பெற்றுள்ள நெருக்கடிகளின்  தாக்கத்துடன் மே 31 வரை சமாளித்து முன்னோக்கிச் செல்ல வேண்டும்.  எரிபொருள் விலை வெகுவிரைவில் குறைவடையும்

நெருக்கடியான நிலைமையின் போது ராஜபக்ஷர்களை போன்று நாணயம் அச்சிட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது. அவ்வாறு வழங்கினால் பணவீக்கம் மீண்டும் உயர்வடையும் பொருளாதாரம் பாதிக்கப்படும். மக்கள் பாதிக்கப்படுவார்கள்.  பொருளாதார ரீதியில் ஜனாதிபதி கடைபிடித்த இறுக்கமான கொள்கையினால் தான் திறைசேரியின் கையிருப்பு உயர்வடைந்துள்ளது. அதனைக் கொண்டு தான் தித்வா புயல் தாக்கத்தின் பாதிப்புக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய  நெருக்கடி நிலைமையை முகாமைத்துவம் செய்ய  100 பில்லியன் ரூபா நிதி  ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவும் போதாது என்று எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

நெருக்கடி நிலைமையை அனைவரும் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும். மக்களுக்கு தலைமைத்துவமளிப்பதற்கு ஜனாதிபதி  தயாராகவே உள்ளார். ஆகவே எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கள் ஒருவாரத்துக்கு கூட செல்வாக்கு செலுத்தாது என்றார்.