பேராதனை பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம், கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கு அறிவியல் பீடம் உள்ளிட்ட பீடங்கள் எதிர்நோக்கும் கட்டிட மற்றும் அடிப்படை வசதிப் பிரச்சினைகளுக்கு 2027ஆம் ஆண்டுக்குள் நிரந்தரத் தீர்வு வழங்க வேண்டும் என பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் குழு உயர் கல்வி அமைச்சில் செவ்வாய்கிழமை (15) கலந்துரையாடல் ஒன்றை நடாத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் அதிஷ கமகே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,பேராதனை பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய பல்வேறு பிரச்சினைகள் கடந்த பல வருடங்களாகத் தொடர்கின்றன. அவற்றுக்கு விரைவான தீர்வுகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் உயர் கல்வி அமைச்சுடன் கலந்துரையாடினோம். இதில் உயர் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.முகாமைத்துவ பீடத்தில் ஆய்வுகூடம், பொதுவான அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை. மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக இரண்டு விரிவுரை மண்டபங்கள் மாத்திரமே காணப்படுகின்றன. இதனால் மாணவர்களின் கல்வி மற்றும் புறச் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.கடந்த வெள்ளப்பெருக்கினால் முகாமைத்துவ பீடத்தின் கட்டிடங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. ஒரு கட்டிடம் தற்போது முழுமையாகப் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே, முழுமையான முகாமைத்துவ பீடத் தொகுதியை அமைப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என கோரியுள்ளோம். அதேபோன்று, கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கு அறிவியல் பீடத்தின் ஆய்வுகூடங்கள் மற்றும் பல கட்டிடங்களும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. பீடத்துக்கு தேவையான புதிய கட்டிடத்தை அமைப்பதற்கான நிதியை ஒதுக்கி, கட்டுமானப் பணிகளை விரைவாக ஆரம்பிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளோம்.பேராதனை பல்கலைக்கழக மாணவர்களுக்கான தங்குமிட வசதியும் போதுமானதாக இல்லை. அரசாங்கத்தின் 55 புதிய மாணவர் விடுதிகள் அமைக்கும் திட்டத்தில் பேராதனை பல்கலைக்கழகத்துக்கு விடுதியொன்று ஒதுக்கப்படவில்லை. எனவே, அந்தத் திட்டத்துக்கு வெளியிலாவது பேராதனை பல்கலைக்கழகத்துக்கு புதிய மாணவர் விடுதியொன்றை வழங்க வேண்டும்.மேலும், பல்கலைக்கழக வீதிகள் மற்றும் மாணவர் நலன்புரி தொடர்பான பிரச்சினைகளையும் அமைச்சுடன் கலந்துரையாடியுள்ளோம். முகாமைத்துவ பீடம் மற்றும் கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கு அறிவியல் பீடத்துக்கு முன்மொழியப்பட்டுள்ள கட்டிடங்களை 2027ஆம் ஆண்டுக்குள் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உயர் கல்வி பிரதி அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.முகாமைத்துவ பீடத்தின் பிரச்சினை 11 வருடங்களாகத் தொடரும் நிலையில், மாணவர்கள் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர். கடந்த ஒரு வருடமாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் பல்கலைக்கழக பீடத் தொகுதிகளில் காணப்படும் இடவசதி மற்றும் அடிப்படை வசதிப் பிரச்சினைகளுக்கு எதிராகத் தொடர்ச்சியாகப் போராடி வருகிறது.எனவே, தற்போது வழங்கப்பட்டுள்ள உறுதிமொழிகள் வெறுமனே வார்த்தைகளாக இல்லாமல் நடைமுறைத் தீர்வுகளாக அமைய வேண்டும். 2027ஆம் ஆண்டுக்குள் பேராதனை பல்கலைக்கழகத்தின் கட்டிடங்கள், மாணவர் விடுதிகள் மற்றும் ஏனைய அடிப்படைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு வழங்கப்பட வேண்டும். இல்லையெனில், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் என்ற வகையில் தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுப்போம் என்றார்.