கேகாலை மாவட்டம் புலத்கொஹுபிட்டி, தெடுகல பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் புகுந்த நன்கு வளர்ந்த சிறுத்தைக்குட்டி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது.கடந்த 15 ஆம் திகதி வீட்டிற்குள் சிறுத்தை புகுந்துள்ளதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து இந்த மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.வைத்தியர்களின் ஆலோசனையின்படி மீட்கப்பட்ட சிறுத்தைக்குட்டியை மீண்டும் அதன் தாயுடன் சேர்க்க வனஜீவராசிகள் அதிகாரிகள் எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை.இதனையடுத்து, மேலதிக சிகிச்சை மற்றும் கண்காணிப்பிற்காகச் 16 ஆம் திகதி அச்சிறுத்தை ரந்தெனிகல வனவிலங்கு சுகாதார முகாமைத்துவ பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டது.ரந்தெனிகல கால்நடை வைத்தியர் அகலங்க பினிதெனிய தலைமையிலான மருத்துவக் குழுவினர் சிறுத்தைக்குட்டிக்குச் சிகிச்சையளித்து வருகின்றனர். சிகிச்சைக்குப் பின் தகுந்த வனப்பகுதியில் அதனை விடுவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.கம்பி வலைகளிலோ அல்லது குடியிருப்புகளிலோ சிறுத்தைகள் சிக்கியிருந்தால் பொதுமக்கள் அவற்றிடம் நேரடியாகச் செல்வதையோ அல்லது மீட்க முயல்வதையோ முற்றாகத் தவிர்க்க வேண்டும்.இவ்வாறான சம்பவங்களின் போது உடனடியாக அப்பகுதியிலிருந்து விலகி, வனஜீவராசிகள் திணைக்களத்தின் 1992 என்ற அவசர அவசிய தொலைபேசி இலக்கத்திற்கு அல்லது அருகிலுள்ள வனவிலங்கு அலுவலகத்திற்குத் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.புலத்கொஹுபிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பாளர் கோசல புத்ததாச தலைமையிலான பொலிஸாரும், மாஇம்பூல் கந்த மற்றும் புலத்கொஹுபிட்டி வனவிலங்கு அலுவலக அதிகாரிகளும் இணைந்து இந்த மீட்புப் பணியைச் சிறப்பாக முடித்துள்ளனர். ஒத்துழைப்பு வழங்கிச் சிறுத்தையைப் பாதுகாப்பாக மீட்க உதவிய வீட்டு உரிமையாளருக்கும் அப்பகுதி மக்களுக்கும் வனஜீவராசிகள் திணைக்களம் நன்றி தெரிவித்துள்ளது.