மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், பாரசீக வளைகுடா பகுதியில் மேலும் இரண்டு வர்த்தகக் கப்பல்கள் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக பிரித்தானிய கடல்சார் வர்த்தகச் செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
ஈரான் மற்றும் இஸ்ரேல் - அமெரிக்கக் கூட்டுப் படைகளுக்கிடையிலான மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல் போக்குவரத்துப் பாதையான ஹோமுஸ் நீரிணை ஊடான போக்குவரத்து முற்றாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஓமானின் மஸ்கட் நகருக்கு கிழக்கே சுமார் 220 கிலோமீட்டர் தொலைவில் கப்பலொன்றுக்கு மிக அருகில் பாரிய வெடிப்புச் சத்தம் கேட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கடலில் புகை மண்டலம் காணப்பட்டதாக கப்பலின் மாலுமி தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஐக்கிய அரபு அமீரகத்தின் புஜைரா நகருக்கு கிழக்கே 11 கிலோமீட்டர் தொலைவில் பயணித்த கப்பலொன்றின் மீது இனந்தெரியாத ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் கப்பலின் உருக்குத் தகடுகள் சேதமடைந்துள்ள போதிலும், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகளோ அல்லது தீ விபத்தோ ஏற்படவில்லை.
கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி ஈரான் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் மேற்கொண்ட தாக்குதலைத் தொடர்ந்து, ஹோமுஸ் நீரிணை ஊடான கப்பல் போக்குவரத்து 94 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.
பெப்ரவரி 28 இல் 50 மசகு எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் பயணித்த நிலையில், மார்ச் 01 ஆம் திகதி வெறும் 03 கப்பல்கள் மட்டுமே இப்பாதையைக் கடந்துள்ளதாக கடல்சார் தகவல் மையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், இப்பாதையை மூடிவிட்டதாகவும், இதனை மீறிச் செல்லும் கப்பல்கள் எரிக்கப்படும் எனவும் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளமை சர்வதேச ரீதியில் பெரும் அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது.
இந்தத் தாக்குதல் சம்பவங்களைத் தொடர்ந்து உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.
ப்ரெண்ட் குரூட் ஒரு பீப்பாயின் விலை 82.30 அமெரிக்க டொலராகும். அதன்படி, 90 சென்ட் அதிகரித்துள்ளது. நைமெக்ஸ் ஒரு பீப்பாயின் 75.22 அமெரிக்க டொலராகும். அதன்படி, 66 சென்ட் அதிகரித்துள்ளது.
கடந்த மார்ச் 03ஆம் திகதி மட்டும் பிரெண்ட் மசகு எண்ணெய் விலை 3.66 டொலர்களினால் அதிகரித்திருந்த நிலையில், இன்றைய தாக்குதல்கள் விலை அதிகரிப்பை மேலும் தூண்டியுள்ளன.
பாரசீக வளைகுடாவில் பகுதியில் மேலும் இரு கப்பல்கள் மீது தாக்குதல்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space