மாத்தறை பிரவுன்ஸ்ஹில் காணி கொள்வனவு மற்றும் ஊவா மாகாண சபைத் தேர்தல் காலப்பகுதியில் சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தின் 7.8 மில்லியன் ரூபாய் நிதியை பயன்படுத்தி 12,000 டி-ஷேர்ட்டுகளை விநியோகித்தமை தொடர்பான விசாரணைகளில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ தொடர்பில் சர்வதேச பொலிஸாரின் (INTERPOL) உதவியை கோரியுள்ளதாக பொலிஸ் மாஅதிபர் தெரிவித்துள்ளார்.வெளிநாட்டில் தங்கியுள்ள பசில் ராஜபக்ஸவை அடையாளம் கண்டு, அவர் தங்கியிருக்கும் இடம் மற்றும் தொடர்புடைய தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இன்டர்போல் ஊடாக நீல அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.மாத்தறை பிரவுன்ஸ்ஹில் பகுதியில் 1.5 ஏக்கர் காணி ஒன்றை 60 மில்லியன் ரூபாய்க்கு கொள்வனவு செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பசில் ராஜபக்ஸவுக்கு எதிராக மாத்தறை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்று வருகிறது.அவர் நீதிமன்றத்தில் தொடர்ந்து ஆஜராகாத நிலையில், கடந்த ஜூலை மாதம் அவருக்கு எதிராக மீண்டும் கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.இந்த வழக்கு பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் மேலும் பலர் சந்தேகநபர்களாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, பசில் ராஜபக்ஸ வெளிநாட்டில் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக அவரது சட்டத்தரணிகள் முன்னதாக நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.இன்டர்போலின் நீல அறிவித்தல் என்பது ஒருவரை சர்வதேச ரீதியில் கைது செய்வதற்கான பிடியாணை அல்ல. மாறாக, குற்றவியல் விசாரணையொன்றுடன் தொடர்புடைய நபரின் அடையாளம், இருப்பிடம் அல்லது நடவடிக்கைகள் தொடர்பில் மேலதிக தகவல்களைப் பெறுவதற்காக பயன்படுத்தப்படும் சர்வதேச எச்சரிக்கை முறைமையாகும்.இதற்குப் புறம்பாக, சிவப்பு அறிவித்தல் (Red Notice) என்பது ஒருவரை கண்டறிந்து, நாடு கடத்தல் நடவடிக்கைகள் நிலுவையில் இருக்கும் நிலையில் தற்காலிகமாக கைது செய்யுமாறு சட்ட அமுலாக்க நிறுவனங்களுக்கு கோரும் தன்மையுடையதாகும்.பசில் ராஜபக்ஸவுக்கு எதிராக நீல அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை இலங்கைக்கு மீள அழைத்து வருவதற்கான அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.