உயர் நீதிமன்றம்  மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்பாமல் ஜனாதிபதி வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வருகிறார். இது அரசியலமைப்பை மீறும் செயலாகும். அதனால் உடனடியாக இந்த வெற்றிடங்களுக்கு  நீதியரசர்களை நியமித்து அவர்களின் உரிமையை பாதுகாக்க வேண்டும் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) இடம்பெற்ற இலங்கை மத்திய  வங்கிச் சட்டத்தின் கீழ் விதிகள் மற்றும் அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் தீர்மானம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

அரசாங்கம் அவசரகால சட்டத்தை  மீண்டும் நீடித்திருக்கிறது. அரசாங்கத்தின் தேவைக்கே அவசரகால சட்டம் நீடிக்கப்பட்டு வருகிறது. அதனால் அடுத்த மாதத்திலாவது இதனை அரசாங்கம் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறேன்.

அதேநேரம் அரசாங்கம் பிரதம நீதியரசர் உள்ளிட்ட நீதியரசர்களின்  ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதற்கு நடவடிக்கை எடுத்துவருவதாக நீதித்துறைக்குள் பேசுபொருளாக மாறி இருக்கிறது. அதேநேரம் அவ்வாறான எந்த  நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என அரசாங்க ஊடக பேச்சாளர் தெரிவித்திருக்கிறார்.

என்றாலும் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளி்ட்ட பல சட்டத்தரணிகள்  சங்கங்கள் ஜனாதிபதிக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்திருக்கின்றனர்.

மேலும் மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் தலா 4 வெற்றிடங்கள் காணப்படுகின்றன. பல மாதங்களாகியும் இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்.இந்த நீதிமன்றங்களுக்கு நீதியரசர்களை நியமிக்கும்போறுப்பு ஜனாதிபதிக்குரியதாகும்.

ஆனால் ஜனாதிபதி வேண்டுமென்றே இதனை மேற்கொள்ளாமல் இருப்பதன் மூலம்  அவர் அரசியலமைப்பை மீறியுள்ளார். அதேநேரம்  நீதியரசர்கள் பதவி உயர்வுகளை பெறும்  வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

அரசியலமைப்பு பேரவையின் நடவடிக்கைகள் சற்று காலம் தாமதிக்கும்போது ஜனாதிபதி அதற்கு எதிிராக உடனடியாக  குரல்கொடுப்பார். இந்த நீதிமன்றங்களுன்னு நியமிக்கப்பட வேண்டிய நீதியரசர்களை  நியமிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.

இது அரசியலமமைப்பு மீறும் செயலாகும். அத்துடன் நீதியரசர்களின் உரிமையை மீறும் செயலாகும்.   ஜனாதிபதி தங்களுக்கு தேவையானவர்களுக்கு பதவி உயர்வுகளை நாட்டின் நீதியரசர்களுக்கும் லஞ்சம் வழங்க முயற்சிக்கிறார். இதுதொடர்பாக  பாராளுமன்றம் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.