மேன்முறையீட்டு நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது தொடர்பில் அரசாங்கம் அவசர அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவர முயற்சிப்பதாக நம்பகமான தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இவ்வாறான அவசர அரசியலமைப்புத் திருத்தங்களை மேற்கொள்வது தவறான முன்மாதிரி என ஜன பலய அமைப்பின் செயற்குழு உறுப்பினர் விதர்ஷன கன்னங்கர சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜன பலய அமைப்பினால் கொழும்பில் அமைந்துள்ள என்.எம் பெரேரா கேந்திர மத்திய நிலையத்தில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

தற்போது இலங்கையில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது 63 ஆகவும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது 65 ஆகவும் காணப்படுகிறது. ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் இது 67 அல்லது 68 வயது வரை நீடிக்கப்பட்டுள்ளது.

சட்டத்துறையில் அனுபவம் வாய்ந்த நீதிபதிகளின் பற்றாக்குறை நிலவுவதால், அவர்களின் சிறந்த சேவையைப் பெற்றுக்கொள்வதற்காக ஓய்வு வயதை நீடிப்பதில் எமக்கு எவ்வித கொள்கை ரீதியான முரண்பாடும் இல்லை.

ஆனால், தற்போதைய ஊழல்மிக்க பழைய அரசியல் சக்திகளையும் பாதாள உலகத்தையும் சட்டத்தின் முன்நிறுத்தும் நீதித்துறை செயல்முறைகள் தீவிரமாக இடம்பெற்று வரும் வேளையில், இந்த அவசர அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரப்படுமானால் அது பாரிய சந்தேகங்களை எழுப்புகிறது.

பிரதம நீதியரசரின் பதவிக் காலத்தை நீடிப்பதும் இதனுடன் தொடர்புபட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருடைய அரசியல் சார்பு நிலைப்பாட்டையும், அண்மையில் நடைபெற்ற அவர்களின் மாநாட்டின் அரசியல் நோக்கங்களையும் நாம் அறிவோம்.

அரசாங்கத்தின் குற்றப் புலனாய்வு மற்றும் நீதித்துறை நகர்வுகளை முடக்குவதே எதிர்க்கட்சிகளின் தேவையாக உள்ளது. அதற்காகவே அவர்கள் இந்த ஓய்வுக்கால நீடிப்புக்கு தங்களின் எதிர்ப்பை வெளியிடுகின்றனர்.

இருப்பினும், புதிய அரசியலமைப்பொன்றைக் கொண்டுவருவதாக நாட்டு மக்களுக்கு வாக்குறுதியளித்த இந்த அரசாங்கம், அதன் ஊடாக ஒட்டுமொத்த நீதித்துறை கட்டமைப்பையும், நீதிபதிகளின் நியமனங்கள் மற்றும் பதவிக் காலங்கள் குறித்தும் விரிவாக மறுவரையறை செய்ய முடியும்.

அதை விடுத்து, 22 ஆவது அல்லது 23 ஆவது அவசர அரசியலமைப்புத் திருத்தங்களின் ஊடாக நீதிபதிகளின் ஓய்வு வயதை மாத்திரம் தனித்து நீடிக்க முயற்சிப்பது முற்றிலும் தவறான ஒரு முன்மாதிரியாக அமைந்துவிடும்.

இந்த நகர்வானது, கடந்த 2012 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அவசர அரசியலமைப்புத் திருத்தங்கள் மற்றும் அப்போதைய அரசாங்கங்களின் தேவைக்கேற்ப மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் மீதான கடுமையான விமர்சனங்களையே மீண்டும் பொதுமக்களுக்கு நினைவூட்டுகின்றது.

குற்றவியல் மற்றும் நிழல் அரசை ஒழிப்பதற்காக தற்போதைய அரசாங்கம் எடுக்கும் வெளிப்படையான முயற்சிகளுக்கு இந்த அவசர நகர்வு பெரும் களங்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

அரசாங்கம் தங்களுக்குச் சாதகமான தீர்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கும், எதிர்க்கட்சிகளை அரசியல் பழிவாங்குவதற்கும் ஏதுவாகவே நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் மிக எளிதாகக் குற்றம் சுமத்த இது வழிவகுக்கும்.

எனவே, நீதிபதிகளின் அனுபவமிக்க சேவையைப் பெற்றுக்கொள்வதில் எமக்கு முரண்பாடு இல்லாதபோதும், அதற்காக அரசாங்கம் கையாளும் அவசர அரசியலமைப்புத் திருத்த செயல்முறையானது இலங்கையின் ஜனநாயக அரசியல் வரலாற்றில் ஒரு தேவையற்ற கேள்விக்குறியைத் தோற்றுவித்துள்ளது என்பதை அரசாங்கத்துக்கு நினைவூட்ட விரும்புகிறோம் என்றார்.