தற்போதைய பிரதம நீதியரசர் உள்ளிட்ட உயர்நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வுபெற்ற பின்னரே, அடுத்ததாகப் பொறுப்பேற்கும் குழுவினருக்கு நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் யோசனையை நடைமுறைப்படுத்த வேண்டும். அதுவே நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதுகாக்கும் மிகச் சிறந்த தீர்வாகும் என சர்வஜன அதிகாரம் கட்சி வலியுறுத்தியுள்ளது.

கொழும்பில் புதன்கிழமை (29) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அக் கட்சியின் உபதலைவர் பேராசிரியர் சன்ன ஜயசுமன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில், அது விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. எனினும், இந்தத் தீர்மானம் பாராhளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும், அதற்கு எதிராகப் பல்வேறு தரப்பினரால் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

அவ்வாறு நீதிமன்றத்துக்குச் செல்லும் போது, இந்த விவகாரம் குறித்து இறுதித் தீர்ப்பு வழங்கப் போவதும் தற்போது பதவியில் இருக்கும் நீதிபதிகள் குழுவே ஆகும்.

இத்தகைய சட்டமூலமொன்றை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மாத்திரம் போதுமானதா அல்லது அதற்கு மக்கள் தீர்ப்பும் அவசியமா என்ற முக்கிய சட்டக் கேள்வி இங்கு எழுகிறது.

இந்த யோசனையின் மூலம் நேரடியாகப் பயனடையப் போகும் தற்போதைய நீதிபதிகளே இதற்கான தீர்ப்பையும் வழங்கவுள்ளதால், இதில் ஒரு நபர் சார்ந்த நலன் சார்ந்த குற்றச்சாட்டு எழக்கூடும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

எனவே, இந்த குற்றச்சாட்டுகளில் இருந்தும் சந்தேகங்களில் இருந்தும் விடுபட வேண்டுமாயின், தற்போதைய பிரதம நீதியரசர் உள்ளிட்ட உயர்நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் முழுமையாக ஓய்வுபெற்ற பின்னர், அடுத்ததாகப் பொறுப்பேற்கும் நீதிபதிகள் குழுவினருக்கு இந்த ஓய்வுபெறும் வயது அதிகரிப்பு யோசனையை நடைமுறைப்படுத்துவதே மிகச் பொருத்தமான வழிமுறையாகும்.

இவ்வாறு செய்வதன் மூலம் நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்தன்மை தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் எழும் தேவையற்ற சந்தேகங்களையும் அச்சங்களையும் முற்றாகத் தவிர்க்க முடியும்.

இல்லையேல், நீதித்துறையை நிறைவேற்றுத்துறை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முயல்கிறதோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் மேலும் வலுவடையும். இது நாட்டின் அமைதியான சூழலுக்குப் பாதகமாக அமைவதுடன், நிறைவேற்றுத்துறை, சட்டவாக்கத்துறை மற்றும் நீதித்துறை ஆகிய முத்துறைகளுக்கு இடையிலான பரஸ்பர நம்பிக்கையையும் சமநிலையையும் சீர்குலைப்பதற்கே வழிவகுக்கும் என்றார்.