டிரைடென்ட் செம்பார் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து நிலக்கரி கொள்வனவு செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் பாரிய முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரின் அனுமதி 2025 நவம்பர் 20ஆம் திகதி வழங்கப்படவிருந்த போதிலும், அதற்கு ஒரு நாளைக்கு முன்னதாகவே, இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

மேலும், இலங்கை அரசாங்கத்துடன் இந்த உடன்படிக்கையில் கையெழுத்திடும் சந்தர்ப்பத்தில் குறித்த நிறுவனம் முறையாகப் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை என்ற அதிர்ச்சியூட்டும் தகவலையும் அந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் ஊடாக இறக்குமதி செய்யப்பட்ட தரம் குறைந்த நிலக்கரியினால் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள மொத்த நட்டம் 2,237.70 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒன்பது தடவைகளாக இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரிகளின் மூலம் இந்த நட்டம் ஏற்பட்டுள்ளது.

முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட இறக்குமதிகளில் முறையே 163.5 மில்லியன் ரூபாய் மற்றும் 94.6 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதுடன், அடுத்தடுத்த கட்டங்களில் அளவு அதிகரித்துச் சென்றுள்ளது.

குறிப்பாக எட்டாவது மற்றும் ஒன்பதாவது கட்ட இறக்குமதிகளில் தலா 390 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நட்டம் ஏற்பட்டுள்ளது. விநியோகஸ்தரிடம் இருந்து நட்டஈடு கோருவதன் மூலம் இந்த 2.2 பில்லியன் ரூபாய் இழப்பை மீட்டெடுக்க முடியும் என கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்காலத்தில் இவ்வாறான மோசடிகள் இடம்பெறுவதைத் தவிர்க்கும் பொருட்டு, நிலக்கரி விநியோகஸ்தர்களின் தகுதியை மதிப்பிடுவதற்கும் அவர்களைப் பதிவு செய்வதற்கும் முறையான அளவுகோல்களை உருவாக்க வேண்டும் என கணக்காய்வாளர் நாயகம் பரிந்துரைத்துள்ளார்.

அத்துடன், நிலக்கரியின் தரத்தை சுயாதீனமாக பரிசோதிக்கும் முறையொன்றை அறிமுகப்படுத்துவது அவசியம் என்றும், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் கட்டுப்பாட்டுப் பிரிவு இத்தகைய பாதுகாப்பு நடைமுறைகளை அமுல்படுத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.