நாம் வரவிருக்கின்றோம் என்ற சிறிய தகவலைக் கேட்டவுடனேயே, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வீரவங்ச குழுவினர் கடும் அச்சமடைந்து, சில நிமிடங்களிலேயே தமது போராட்ட பந்தல்களை அவசர அவசரமாக சுருட்டிக்கொண்டு இங்கிருந்து ஓடியுள்ளனர் என சிவில் செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக கமகே சுட்டிக்காட்டியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என்று வலியுறுத்தி தாக்குதலில் பாதிக்கப்பட்டோர்களில் சிலர் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் நேற்று (11) காலை திரண்டனர்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
நேற்று எமக்கு பொலிஸாரிடம் இருந்தும், அத்துடன் புலனாய்வு பிரிவினரிடம் இருந்தும் நாம் இந்த இடத்துக்கு வருகை தருகின்றோமா என்று வினவி தொலைபேசி அழைப்புகள் வந்தன. எனினும், நான் அதனை அவ்வளவு பாரதூரமாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், நாம் இந்த இடத்துக்கு வருவதற்கு உண்மையாகவே தயாராகத்தான் இருந்தோம்.
ஆயினும், புலனாய்வு பிரிவினர் இங்கு சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த குழுவினருக்கு நாம் இங்கு வரவிருக்கின்றோம் என்ற தவறான தகவலை வழங்கியுள்ளனர் என்று நான் நினைக்கின்றேன். அந்த சிறிய தகவலைக் கேட்ட மாத்திரத்தில், வீரவங்ச குழுவினர் கடும் அச்சமடைந்து,
சில நிமிடங்களிலேயே தமது போராட்ட பந்தல்களை அவசர அவசரமாக சுருட்டிக்கொண்டு இங்கிருந்து ஓடியுள்ளனர். நாம் வரும் வரை அவர்களால் இங்கு காத்திருக்க முடியாமல் போய்விட்டது. கடந்த காலத்தில் விமல் வீரவங்சவுக்கு புல் வெட்டும் இயந்திரத்தினால் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டதாலேயே அவர் தப்பித்துக்கொண்டார். அவர் தற்போது என்ன நினைக்கின்றார் என்றால், கட்டுவாப்பிட்டிய, நீர்கொழும்பு போன்ற பகுதிகளில் இருந்து நீதி கோரி இந்த இடத்துக்கு மக்கள் திரண்டு வந்தால், அவ்வாறு தப்பித்துக்கொள்ள முடியாது என்று பயப்படுகின்றார்.
இதன்காரணமாகவே, சுரேஷ் சலேவை விடுதலை செய்யக்கோரி தொடர் சத்யாகிரக போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறி இணைந்திருந்த அந்த குழுவினர், நாம் வருகின்றோம் என்ற சிறு தகவலைக் கேட்டவுடன் சில நிமிடங்களிலேயே அனைத்தையும் அக்குவேறு ஆணிவேறாக சுருட்டிக்கொண்டு ஓடியுள்ளனர்.
ராஜபக்சாக்களும் தங்களின் சிம்மாசனம் இந்த அளவுக்கு வீழ்ச்சியடையும் என்று ஒருபோதும் நினைத்திருக்கவில்லை. அதேபோல் சுரேஷ் சலேவும் தான் இந்த முறையில் சிறைச்சோறு உண்ண நேரிடும் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார். எமக்கு தேவைப்பட்டதும் அதுவேயாகும்.
அன்று கொச்சிக்கடை தேவாலயத்தில் தனது தாயை இழந்த 2 அரை வயது குழந்தையொன்று 3 மாதங்கள் தாயின்றி தவித்தது. இன்று நாம் சிவில் செயற்பாட்டாளர்களாக எந்தவித அரசியல் நோக்கங்களும் இன்றி, கடந்த 7 வருடங்களாக இந்த மக்களுக்கான நீதியையே கோரி நிற்கின்றோம்.
இந்த மக்களுக்கு நியாயமான நீதி கிடைக்க வேண்டும். அன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த 278 நபர்களுக்கும், காயமடைந்த 500 நபர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும். இந்த நாட்டில் அரச பயங்கரவாதத்தினால் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே நாம் இங்கு முன்னின்று போராடுகின்றோம். இந்த குருதி வெறி பிடித்த அரச பயங்கரவாதம் இந்த முறையாவது முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.
இதற்கிடையில் என்னை வெள்ளை வேனில் கடத்திச் சென்று, பயமுறுத்தி, இந்த போராட்டங்களை நிறுத்துமாறு வற்புறுத்தினாரகள்;. என்னை தொடர்ந்து 8 நாட்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைத்துச் சென்று, நான் வழங்கிய வாக்குமூலங்களை மீளப் பெற்றுக்கொள்ளுமாறும், இதற்காக மன்னிப்பு கோரி இந்த போராட்டத்தை கைவிடுமாறும் நாளாந்தம் வற்புறுத்தினர்.
எனினும், எத்தனை அழுத்தங்கள் வந்தபோதிலும் நான் வழங்கிய வாக்குமூலங்களில் இருந்து ஒரு புள்ளியைக் கூட மாற்றிக்கொள்ள மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறினேன். இந்த தாக்குதலானது கோட்டாபய ராஜபக்சவை ஆட்சி பீடத்தில் அமர்த்துவதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு அரசியல் சதித்திட்டமாகும் என்பதில் நான் இன்றும் உறுதியாக இருக்கின்றேன்.
நான் நீதிமன்றத்துக்குச் சென்று அழவோ அல்லது தஞ்சம் கோரவோ இல்லை. எனது பெற்றோரையோ அல்லது சகோதரர்களையோ அனுப்பி அழுது புலம்ப வைக்கவில்லை. எனக்கும் ஒரு குடும்பம் இருக்கின்றது. அதேபோன்று ஹிஜாஸ் ஹிஸ்புல்லா அவர்களுக்கும் குடும்பம் இருக்கின்றது, மருத்துவர் ஷாபிக்கும் குடும்பம் இருக்கின்றது. அவர்கள் எவரும் இந்த சுரேஷ் சாலேவைப்போல் அழுது புலம்பவில்லை என்றார்.