நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய உயர் திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்று(10.06.2026) காலை 10.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடல் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர், நயினாதீவு ஸ்ரீ நாக பூஷணி அம்மன் கோவில் உயர் திருவிழா எதிர்வரும் 2025.06.15ஆம் திகதி தொடக்கம் 2025.06.30ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.கடந்த திருவிழாவில் அடையாளம் காணப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டிய தேவை காணப்படுவதாகவும், குறிப்பாக கடற்போக்குவரத்து பாதுகாப்பு தொடர்பாக பாரிய சவால்கள் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

மேலும், கடந்த வருட திருவிழா ஏற்பாடுகளில் கற்றுக் கொண்ட பாடத்தினை அடிப்படையாகக் கொண்டு இம் முறையும் உயர் திருவிழாவினை மேலும் சிறப்பாக நடைபெற அனைவரின் ஒத்துழைப்பினையும் வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

கலந்துரையாடலில் பின்வரும் ஏற்பாடுகளை மேற்கொள்வது எனத் தீர்மானிக்கப்பட்டது.

01.பாதுகாப்பிற்கு தேவையான பொலிஸ் உத்தியோகத்தர்கள் - முதல் 10 நாள் வரை 25 பொலிஸ் உத்தியோகத்தர்களையும், இறுதி 5 நாட்களும் சப்பறம், தேர், தீர்த்தம் மற்றும் பூங்காவன உற்சவங்கள் வரை மேலும் 50 பொலிஸ் உத்தியோகத்தர்களையும் சேவையில் ஈடுபடுத்துவது எனவும், குறிகட்டுவானில் முதல் 10 நாள் வரை 5 பேரும் இறுதி 5 நாட்களில் மேலும்10 பேரும் சேவையில் ஈடுபடுத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது.

02.திருவிழாவிற்காக 42 தனியார் படகுகள் தயார் நிலையில் உள்ளதாகவும், அதனை வணிக கப்பல் துறை செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர் தலைமையிலான குழு பரிசீலனை மேற்கொள்ளவதுடன் இந்த 42 படகுகளை தவிர வேறு படகுகளில் பக்தர்களை ஏற்ற முடியாது எனவும், அவ்வாறு வேறு படகுகளில் ஏற்றினால் பொலிஸாரின் நடவடிக்கை உட்படுத்தப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.  

03.படகோட்டிகள் மது பாவனையில் இருந்தால் படகும் அதன் ஓட்டுனரும் மூன்று மாதங்களுக்கு அப் படகினை ஓட்டுவதற்கு தடை விதித்தல் எனவும், இதற்கு படகு உரிமையாளர் சங்கம் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

04.நயினாதீவு பிரதேசத்தில் ஒலிபெருக்கி மூலம் - படகுகளில் பயணிக்கும் போது உயிர்காப்பு அங்கி அணியாது பயணிப்பது தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும், மதுபோதையில் படகுகள் செலுத்துவது தண்டனைக்குரிய குற்றம் எனவும் மக்கள் சமூக பொறுப்புடன் செயல்படுமாறும் அறிவிக்குமாறு பிரதேச செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.

 

05.படகுகளில் பக்தர்கள் உயிர்காப்பு அங்கிகள் அணியாது பயணிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டதுடன், பயன்படுத்தப்படும் உயர்காப்பு அங்கிகள் பாவணைக்கு உகந்தவையா எனவும் வேலணை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொலிஸ், கடற்படை ஆகியோர் இணைந்து பரிசீலனை செய்வது எனத் தீர்மானிக்கப்பட்டது.

06.சாரணர்களின் சேவைகளை பெற்றுக்கொள்வது மற்றும் இறுதி இரு திருவிழாவிற்கும் யாழ்ப்பாண மாவட்ட சாரணர்களின் சேவைகளை பெற்றுக்கொள்வதாகவும் தீர்மானிக்கப்பட்டது.

07.குறிகட்டுவானிலிருந்து ஆலயம் செல்வதற்கான படகு போக்குவரத்து ஒரு வழிக் கட்டணம் 100.00 ரூபாய் எனவும் தீர்மானிக்கப்பட்டது. அத்தோடு கடற்போக்குவரத்து (படகு) நயினாதீவிலிருந்து காலை 6.00 மணிக்கும் குறிகட்டுவானிலிருந்து காலை 6.30 மணிக்கும் போக்குவரத்து சேவை நடைபெறவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது.

08.குறிகட்டுவான் துறைமுகத்தின் உள்நுழைவு வரை வாகனங்கள் தரித்து நிற்பதனை தடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.