தொலைபேசி பரிமாற்றக் கோபுரங்களின் கேபிள்களை திருடிய சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்கள் இருவர், ஐஸ் போதைப்பொருளுடன் ராகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (13) மாலை ராகம பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து 17 கிராம் 700 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொலைபேசி கோபுரங்களில் இருந்து சுமார் 9 இலட்சத்து 22 ஆயிரத்து 750 ரூபாய் பெறுமதியான கேபிள்களை வெட்டித் திருடியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் 27 மற்றும் 34 வயதுடைய ரதுபஸ்வல மற்றும் கடவத்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில், திருடப்பட்ட பெருந்தொகையான கேபிள் துண்டுகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், ராகம பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.