தென் கொரியாவில் 2024-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சர்ச்சைக்குரிய இராணுவச் சட்ட அமுலாக்கம் மற்றும் கிளர்ச்சி முயற்சி தொடர்பான வழக்கில், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஹான் டக்-சூவுக்கு (Han Duck-soo)  23 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் இன்று (ஜன 21) தீர்ப்பளித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 03 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி யூன் சுக்-இயோல் (Yoon Suk-yeol)  அறிவித்த சட்டவிரோத இராணுவச் சட்டத்திற்கு (Martial Law) உடந்தையாக இருந்ததாகவும், அந்த கிளர்ச்சி முயற்சிக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்க முயன்றதாகவும் முன்னாள் பிரதமர் ஹான் டக்-சூ மீது குற்றம் சாட்டப்பட்டது.

அரசாங்க தரப்பு விசேட வழக்கறிஞர் குழு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை கோரியிருந்தது.

வழக்கறிஞர்கள் கோரியதை விட மேலதிகமாக 23 ஆண்டுகள் சிறைத் தண்டனையை நீதிமன்றம் வழங்கியுள்ளது. இது போன்ற வழக்குகளில் வழக்கறிஞர்கள் கோருவதை விட அதிக தண்டனை வழங்கப்படுவது அரிதான ஒன்றாகும்.

நீதிபதி லீ ஜின்-க்வான் (Lee Jin-gwan) தனது தீர்ப்பில் பின்வருவனவற்றைக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமராக இருந்த ஹான், ஜனாதிபதியின் சட்டவிரோதச் செயலைத் தடுக்கத் தவறிவிட்டார்.

இராணுவச் சட்டம் தொடர்பான ஆவணங்களை மறைத்ததோடு, அவற்றை சட்டப்பூர்வமானவை எனக் காட்டுவதற்காகப் போலி ஆவணங்களைத் தயாரித்து, பின்னர் அவற்றை அழித்துள்ளார்.

இவரது செயல் தென் கொரியாவை மீண்டும் ஒரு சர்வாதிகார இருண்ட காலத்திற்குத் தள்ளும் அபாயத்தை ஏற்படுத்தியது.

இந்த வழக்கின் முதன்மை குற்றவாளியான முன்னாள் ஜனாதிபதி யூன் சுக்-இயோல் மீதான கிளர்ச்சி வழக்கின் தீர்ப்பு வரும் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி அன்று வழங்கப்படவுள்ளது.

ஏற்கனவே, கடந்த வாரம் (ஜன 16) அவருக்கு அதிகார துஷ்பிரயோகம் மற்றும் நீதிக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டுக்காக 05 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கிளர்ச்சி வழக்கில் அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என அரசுத் தரப்பு கோரியுள்ளது.