தனக்குக் கிடைத்த பரிசுப்பணத்தை தனது தந்தை பயன்படுத்திக்கொண்டதாக 10 வயது மகன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

சீனாவில் நடைபெறும் சந்திர புத்தாண்டு காலத்தில், சிவப்பு நிற உறையில் பணம் வைத்து பெரியவர்கள் சிறுவர்களுக்கு கொடுத்து, வாழ்த்தி ஆசிர்வதிப்பது சீன கலாசாரமாகும்.

அண்மையில் சீனாவில் நடைபெற்ற பாரம்பரிய சந்திர புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது, சீன கலாசாரத்தின்படி, உறவினர்கள் அச்சிறுவனுக்கு 80 ஆயிரம் யுவான் பணத்தொகையை பரிசாக  வழங்கியுள்ளனர்.

அந்த பணத்தொகை தந்தையின் வங்கிக்கணக்கில் இடப்பட்டிருந்த நிலையில், விவாகரத்து பெற்று வாழ்ந்து வந்த சிறுவனின் தந்தை, தனது இரண்டாவது திருமணத்துக்கான செலவுக்கு அந்தப் பணத்தை பயன்படுத்திக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன் பின்னர், தனது பரிசுப்பணத்தை தந்தை திருப்பித் தரவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து சிறுவன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளான்.

அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தந்தை செலவழித்த குறித்த 80 ஆயிரம் யுவானையும் தனது மகனுக்கு திருப்பித் தரவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

பெற்றோர் விவாகரத்து பெற்ற பின்னர், சிறுவன் தனது தந்தையுடன் மட்டுமே வசித்து வரும் நிலையிலேயே இவ்வழக்கு தொடரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.