சிரியாவில் உள்ள இராணுவ படைத்தளமொன்றின் ஆயுத சேமிப்புக் கிடங்கில் இன்று (21) அதிகாலை வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் 4 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.சிரியாவின் வடக்கில் உள்ள அலெப்போ மாகாணத்தில் அல் இஸ் நகரில் உள்ள குறித்த இராணு படைத்தள ஆயுதக் கிடங்கில் ஏற்பட்டுள்ள இந்த பயங்கர வெடிப்பினைத் தொடர்ந்து தீயணைப்புப் படையினரும் மீட்புக் குழுவினரும் மீட்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வெடிப்பு ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சம்பவ இடத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவிலிருந்தும் இந்த வெடிப்புச் சத்தங்கள் கேட்கின்றன. நோயாளர் காவு வண்டிகளும் தீயணைப்பு வாகனங்களும் வெடிப்பு இடம்பெற்ற ஆயுதக் கிடங்கை நோக்கிச் சென்று மீட்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.இந்நிலையில் குறித்த பகுதியைச் சேர்ந்த ஒருவர், மிகப் பெரிய வெடிப்புச் சத்தத்தை தான் கேட்டதாகவும் அவ்வேளை தனது வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்று பார்த்தபோது தொலைவில் பெரியளவில் தீப்பிழம்புகள் எரிந்ததைத் தான் கண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.