சபை நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுத்திய குற்றத்துக்காக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை சபையிலிருந்து வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார்.

இன்று புதன்கிழமை (20) நடைபெற்ற பாராளுமன்ற அமர்விலேயே சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முழு விபரம் 

சபை நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுத்திய குற்றத்துக்காக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை சபையிலிருந்து வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார். என்றாலும் சபை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு விவாதம் இடம்பெறும் வரை சாமர சம்பத் எம்.பி. சபையில் அமர்ந்திருந்த நிலையில் அவராகவே சபையை விட்டு வெளியேறினார்.

பாராளுமன்றம் புதன்கிழமை  சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில்,  சாமர சம்பத் எம்.பி. ஒழுங்கு பிரச்சினை ஒன்றை எழுப்பி, “எனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளமை தொடர்பில் அறிக்கை ஒன்றை உங்களுக்கு கையளித்திருந்தேன். எனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளமை தொடர்பில் செயலாளர் நாயகம், சபை முதல்வர் மற்றும் நீதி அமைச்சருக்கு தெளிவுபடுத்தி இருந்தேன். அதனால் அதற்கான  சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என்றார்.

அதற்கு  சபாநாயகர் தெரிவிக்கையில், உங்களது சிறப்புரிமை பிரச்சினை தொடர்பில் செயலாளர் சபையினால்  உங்களுக்கு பதில் ஒன்றை வழங்கி இருக்கிறது. நீதிமன்ற உத்தரவு தொடர்பில் சபையில் கதைக்க முடியாது என்றார்.

அதனைத் தொடர்ந்து சாமர சம்பத் எம்.பி, தொடர்ந்து தனக்கு அந்த சந்தர்ப்பத்தை வழங்குமாறு கேட்டுவந்ததுடன் இறுதியில் ஆசனத்தில் இருந்து எழுந்து சபை நடுவே சென்று, தனக்கு அந்த சந்தர்ப்பத்தை வழங்குமாறு தெரிவித்துக்கொண்டேயிருந்தார்.

இறுதியில் சபாநாயகர், அவருக்கு தனது சிறப்புரிமை பிரச்சினையை முன்வைப்பதற்கு இடமளித்தார்,

அதனைத் தொடர்ந்து அவர்  தனது  சிறப்புரிமை பிரச்சினையை முன்வைத்து உரையாற்றிக்கொண்டிருக்கையில், அந்த அறிக்கையை முழுமையாக வாசித்து முடிவடைவதற்கு முன்பே அவருக்கான சந்தர்ப்பம் நிறுத்தப்பட்டது. அதனால் ஆத்திரமடைந்த அவர்,  சிறப்புரிமை பிரச்சினையை முழுமையாக வாசிப்பதற்கு இடமளிக்குமாறு தொடர்ந்து கேட்டுவந்தார். என்றாலும்  சபாநாயகர் அதற்கு இடமளிக்காததால், எதிர்க்கட்சி ஏனைய உறுப்பினர்களும் ஆசனங்களில் இருந்து எழுந்து, சாமர சம்பத் எம்.பிக்கு அதனை வாசித்து முடிப்பதற்கு  இடமளிக்குமாறு கேட்டுக்கொண்டனர். இறுதியில் சபாநாயகர், அந்த அறிக்கையின் இறுதிப் பகுதியை சபைக்கு வாசித்தார்.

என்றாலும் தொடர்ந்தும் சாமர சம்பத் எம்.பி. சபாநாயகருடன் முரண்பட்டுக்கொண்டு, தனக்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு தெரிவித்துவந்தார். அதற்கு சபாநாயகர், நிலையியற் கட்டளையின் பிரகாரம் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கதைக்க முடியாது என்றார்.




மேலும் கண்டறிக
சினிமா விமர்சனங்கள்
வலையொலி சந்தா
உலக செய்திகள்





அதனைத் தொடர்ந்து சாமர சம்பத் எம்.பி சபைக்கு நடுவில் வந்து சபாநாயகருக்கு எதிரான சில விடயங்களை தெரிவித்துவந்ததைத் தொடர்ந்து, சபாநாயகர், சபை நடவடிக்கைகளை கொண்டுசெல்வதற்காக அவரை பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றுமாறு செயலாளர் சபைக்கு உத்தரவிட்டார்.

என்றாலும் சபாநாயகரின் உத்தரவுக்கமைய சாமர சம்பத் எம்.பியை உடனடியாக வெளியேற்ற முடியாமல் இருந்தது.  படைக்கல சேவிதர் அவருக்கு அருகில் சென்று, அது தொடர்பில் அவருக்கு எடுத்துரைத்தார். என்றாலும் அவர் உடனடியாக வெளியில் செல்லாமல் சுமார் 10 நிமிடங்கள் வரை ஆசனத்தில் இருந்த நிலையில், பின்னர் அவராகவே சபையிலிருந்து வெளியில் சென்றார். அந்த நேரத்திலும் சபை நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்றுக்கொண்டிருந்தன.