இந்தியாவின் கேரள மாநிலத்தில் இரட்டை சகோதரர்களான அகில் தாமஸ் மற்றும் நிகில் தாமஸ் ஆகியோர், இரட்டை சகோதரிகளான மேகி மேரி மற்றும் மரியா மேரி ஆகியோரை திருமணம் செய்துகொண்ட சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
கேரளாவின் கோட்டயம் மாவட்டம் சங்கனாச்சேரியில் உள்ள மெட்ரோபாலிட்டன் தேவாலயத்தில் கடந்த ஜூலை 30ஆம் திகதி கிறித்தவ முறைப்படி இந்தத் திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்தத் திருமணத்தின் மற்றொரு சிறப்பம்சமாக, திருமணத்தை நடத்தி வைத்த பாதிரியார்களும் இரட்டையர்கள் என்பதுடன், அவர்களுக்கு உதவிய 'ஆல்டர் பாய்ஸ்' எனப்படும் சிறுவர்களும் இரட்டையர்களாக இருந்துள்ளனர்.
இதனால், ஒரே திருமண நிகழ்வில் நான்கு ஜோடி இரட்டையர்கள் இடம்பெற்றமை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
திருமணத்திற்குப் பின்னர், மணமக்கள் மற்றும் இரட்டை பாதிரியார்களான அன்டோ பெழும்கட்டில், அஜோ பெழும்கட்டில், அத்துடன் இரட்டை 'ஆல்டர் பாய்ஸ்' ஜெரோன் ஜேம்ஸ், ஜோஹோன் ஜேம்ஸ் ஆகியோர் ஒன்றாக நிற்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.