காலி - கொழும்பு பிரதான வீதியின் காலி, தடல்ல பகுதியில் பயணித்த பயணிகள் போக்குவரத்து பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி, அருகில் இருந்த சுவருடன் மோதி இன்று (04) வியாழக்கிழமை  காலை விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.

அம்பாந்தோட்டையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் போக்குவரத்துப் பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்து நடந்த சமயத்தில் பஸ்ஸுக்குள் சுமார் 20 பயணிகள் வரை பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பேருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது, தடல்ல பகுதியில் வைத்து சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைக் கலக்கம்  காரணமாகப் பஸ்ஸை கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி, அருகில் இருந்த சுவருடன் மோதியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த விபத்தினால் பஸ்  கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் குறித்து காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுவருவதாக தெரிவித்தனர்.