நடைபாதைகளைப் பயன்படுத்தாமல், முறைக்கேடான வகையில் பிரதான வீதிகளைக் கடக்கும் பாதசாரிகளுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த கண்டி பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
கண்டி நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும் பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் அமைக்கப்பட்ட பாதாள நடைபாதைகளைப் பயன்படுத்தாமல், ஆபத்தான முறையில் வீதியைக் கடப்பது தற்போது பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நகரிற்கு வருகை தரும் மக்களின் பாதுகாப்புக்காக பெருமளவிலான செலவில் இந்த பாதாள நடைபாதைகள் அமைக்கப்பட்டிருந்த போதிலும், சில தரப்பினர் அவற்றை தவிர்ப்பதன் காரணமாக வீதி விபத்துகளின் அபாயமும் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
இதுதொடர்பாக கண்டி பொலிஸார் குறிப்பிடுகையில், சட்டவிரோதமான முறையில் வீதியைக் கடக்கும் நபர்களுக்கு எதிராக தகுதி தராதரம் பாராது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.
அதற்கமைய, பாதசாரி கடவைகள் மற்றும் பாதாள நடைபாதைகளுக்கு அருகில் விசேட பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக அபராதம் விதிப்பது உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கண்டி பொலிஸார் மேலும் வலியுறுத்தியுள்ளனர்.