மக்களின் வரிப்பணத்தை இலஞ்சமாக பெற்று தற்போது சிறையில் உள்ள திருடர்கள் அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்குகிறார்கள். பொருளாதார மேம்பாடு பற்றி கருத்து தெரிவிக்கிறார்கள்.ஊரில் எவரேனும் சிறைக்கு சென்றால் வெட்கத்தால் வெளியில் கூட வரமாட்டார்கள். நாமல் ராஜபக்‌ச சபைக்கு வந்து மக்கள் நலன் பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது என தேசிய மக்கள் சக்தியின் ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்தருவன் மதரசிங்க தெரிவித்தார்.நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (8) நடைபெற்ற மோட்டார் வாகன கட்டளைச் சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,ஊரில் உள்ளவர்கள் ஏதாவது குற்றச்செயலுக்காக சிறைக்குச் சென்றால் அவர்கள் வெட்கத்தால் வீட்டை விட்டு வரமாட்டார்கள். திருட்டு சம்பவத்துக்காக சிறை சென்றவர்கள் பிறருடன் கதைக்கக் கூட மாட்டார்கள். ஆனால் இந்த பாராளுமன்றத்தில் அவ்வாறான நிலைமையை காண முடிவதில்லை.ஊழல் மோசடி சம்பவத்துக்காக சிறைக்குச் சென்றவர்கள் இன்று நாடாளுமன்றத்துக்குள் வந்து பொருளாதார மேம்பாடு பற்றி பேசுகிறார்கள். அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்குகிறார்கள். விவசாயிகளுக்கு உரம் இல்லை என்று நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிடுகிறார்.  கழிவு உரத்தை இறக்குமதி செய்து நாட்டின் விவசாயத்தை அழிக்கும் தீர்மானத்துக்கு ஆதரவாகவே நாமல் ராஜபக்‌ச கையுயர்த்தினார்.எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வழக்குகள் நீதிமன்றத்தில்  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்போது அவர்களின் உடல் நலன் குறித்து வெளிநாடுகளின்  வைத்தியசாலைகள் தான் அறிக்கை சமர்ப்பிக்கின்றன. அரச மருத்துவ கட்டமைப்பை வினைத்திறனாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கும்போது  அதற்கு எதிராக செயற்படுகிறார்கள்.அரசியல் பழிவாங்கலுக்காகவே நாமல் ராஜபக்‌ஷ கைது செய்யப்பட்டார் என்று  எதிர்க்கட்சியின் உறுப்பினர்  ரோஹித அபேகுணவர்தன  குறிப்பிடுகிறார். எயார் பஸ் கொள்வனவு விவகாரத்தில்  குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அவுஸ்திரேலியா, பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஒத்துழைப்புடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.எயார் பஸ் கொள்வனவு விவகாரத்தில் 100 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் தான் நாமல் ராஜபக்‌ச கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவர்தான் இன்று பொருளாதார மேம்பாடு பற்றி அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்குகிறார் என்றார்.