மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை நாளை 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த ஆகஸ்ட் 31 ஆம் திகதி மட்டக்களப்பு சென்றல் வீதியில் அமைந்துள்ள புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கங்கள் பணியக அலுவலகத்திற்குள் நுழைந்து, அங்குள்ள அரசு ஊழியர்களின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக பாதிக்கப்பட்ட அரச அதிகாரிகளால் மட்டக்ககளப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.இதனையடுத்து இது குறித்து வாக்குமூலம் வழங்க பொலிஸ் நிலையத்திற்கு சம்பவ தினமான இன்று (07) திங்கட்கிழமை அம்பிட்டிய சுமணரத்ன தேரர் சென்றிருந்த நிலையில் அவரை மட்டக்களப்பு பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் வை.விஜயராஜா தலைமையிலான பொலிஸார் கைது செய்தனர்.இதில் கைது செய்யப்பட்ட தேரருக்கு எதிராக அரச அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் ஏற்கனவே நீதிமன்ற வழக்கு ஒன்றுக்கு நீதிமன்றில் ஆஜராகாமல் இருந்ததையடுத்து நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரு பிடிவிறாந்து கைது செய்யப்பட்ட அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதவான் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட வழக்கிற்கு ஒரு இலட்சம் ரூபா இருவர் கொண்ட சரீர பிணையில் விடுவித்ததோடு சுரங்க பணியகத்தில் அரச அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவத்தில் நாளையதினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.