அரசியல் தலையீடுகள் இல்லாமல் அரச நிறுவனங்களும், நீதித்துறையும் சுயாதீனமாக செயற்படுகின்றன. ஊழல்வாதிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சவால்களுக்கும், போராட்டங்களுக்கும் அடிபணிந்து ஊழல்வாதிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை இடைநிறுத்த போவதில்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.சர்வதேச ஜனநாயக தினத்தை முன்னிட்டு தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்பாடு செய்த நிகழ்வு செவ்வாய்க்கிழமை (15) கொழும்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,ஜனநாயகத்தின் இதயம் சட்டத்தின் ஆட்சி. கடந்த காலங்களில் சட்டத்தின் ஆட்சி தொடர்பில் மக்கள் மத்தியில் எதிர்மறையான நிலைப்பாடு காணப்பட்டது. ஆனால் தற்போது அவ்வாறான தன்மை கிடையாது. சட்டம் அனைவருக்கும் பொதுவானதாகவே காணப்படுகிறது. சட்டத்துக்கு அப்பாற்பட்டு எவருக்கும் செயற்பட முடியாது.அரசியல் தலையீடுகள் இல்லாமல் குற்றப்புலனாய்வுத் திணைக்களம், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு , பொலிஸ் திணைக்களம் உட்பட அரச நிறுவனங்களும், நீதிமன்றங்களும் சுயாதீனமாக செயற்படுகின்றன. ஆகவே சட்டத்தின் ஆட்சி தொடர்பில் மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. அந்த நம்பிக்கை பாதுகாக்கப்படும்.ஊழல்வாதிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சவால்களுக்கும், போராட்டங்களுக்கும் அடிபணிந்து ஊழல்வாதிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை இடைநிறுத்த போவதில்லை. ஊழலை இல்லாதொழிக்க வேண்டுமாயின் ஊழல்வாதிகளுக்கு சட்டத்தின் ஊடாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தலை நடத்தி மாத்திரம் ஜனநாயகத்தை பாதுகாக்க முடியாது. தேர்தல் முறைமையில் பல குறைப்பாடுகள் காணப்படுவது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.அவற்றுக்கு தீர்வு காண்பதற்கு தற்போது பாராளுமன்றத்தின் ஊடாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் வெற்றிக்காக மாத்திரம் தேர்தலை நடத்த கூடாது. தேர்தல் முறைமை சிறந்த சமூக கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.ஜனநாயகத்தை பாதுகாப்பதில் ஊடகங்களின் பங்களிப்பு இன்றியமையாதது. ஆனால் தற்போது சமூக ஊடகங்களிலும், ஊடகங்களிலும் போலியான மற்றும் திரிபுப்படுத்தப்பட்ட செய்திகள் முன்னிலையில் உள்ளன. ஊடகங்கள் மீதான மக்களின் நம்பிக்கை சிதைவடைந்தால் ஜனநாயகம் பாதிக்கப்படும். ஆகவே போலி செய்திகளை கட்டுபடுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.