ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால், ஹோர்மூஸ் நீரிணை பகுதியில் மிகப்பெரிய அளவிலான தாக்குதலை நடத்த அமெரிக்க இராணுவம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த பெப்ரவரி 28 முதல் நீடித்து வந்த போர், ஏப்ரல் 8 ஆம் திகதி தற்காலிக போர் நிறுத்தத்திற்கு வந்தது.
கடந்த 23-ம் திகதியுடன் இந்த அவகாசம் முடிந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போர் நிறுத்தத்தை காலவரையறையின்றி நீட்டிப்பதாக அறிவித்தார்.
இருப்பினும், தற்போதைய சூழல் குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி ட்ரம்ப், “காலம் கடந்து கொண்டிருக்கிறது, ஈரான் தரப்பு விரைந்து முடிவெடுக்க வேண்டும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு மத்தியில் ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"ஈரான் தேசப்பற்றாளர்களின் ஒற்றுமையால் எதிரிகளின் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மக்களின் மனதில் அச்சத்தை விதைக்க எதிரி நாடு முயற்சி செய்கிறது; இதற்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது." எனத் தெரிவித்துள்ளார்.
போர் காரணமாக ஹோர்மூஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ள நிலையில், அமெரிக்கா அந்தப் பகுதியை முழுமையாக முடக்கியுள்ளது. சீனாவிலிருந்து ஈரானுக்கு ஆயுதங்கள் செல்வதைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் தற்போதைய பலம்:
மேற்கு ஆசிய பகுதியில் 19 போர்க்கப்பல்கள் முகாமிட்டுள்ளன.
பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களில் 300-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் தயார் நிலையில் உள்ளன.
ஹோர்மூஸ் நீரிணை பகுதியில் ஈரான் வீசியுள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அமைதி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திடும் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ள அமெரிக்க இராணுவ அதிகாரிகள், ஒருவேளை பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் ஹோர்மூஸ் நீரிணையில் தாக்குதல் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும், கண்ணிவெடிகளை வீசும் ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்த ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது பாகிஸ்தான், துருக்கி மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் இரு நாடுகளுக்கும் இடையே சமரசத்தை ஏற்படுத்த தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.