எதிர்வரும்- 02 ஆம் திகதி முதல் எதிர்வரும்- 15 ஆம் திகதி  வரை சூரியன் இலங்கைக்கு மேலாக உச்சம் கொடுக்கவுள்ளது. சூரியன் எதிர்வரும்- 04 ஆம் திகதி பருத்தித்துறைக்கு நேராகவும், 05 ஆம் திகதி எல்பிட்டியவுக்கு நேராகவும், 06 ஆம் திகதி களுத்துறைக்கு நேராகவும், 07 ஆம் திகதி கொழும்புக்கும் களனியாவுக்கும் நேராகவும், 08 ஆம் திகதி மகியங்கனைக்கு நேராகவும் உச்சம் கொடுக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ,மக்கள் மிக அவதானமாகவிருப்பது அவசியமென யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை (29.03.2026) இரவு ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இதன் காரணமாக எதிர்வரும்-02 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை இலங்கையின் பல பகுதிகளிலும் அளவிடப்படும் நாளுக்கான சராசரி வெப்பநிலை 38- 42 பாகை செல்சியஸ் ஆக நிலவுமென எதிர்பார்க்கப்படுகின்றது. பகல் பொழுதில் அளவிடப்படும் நாளின் அதிகூடிய வெப்பநிலை 43 பாகை செல்சியஸை விட அதிகமாகவிருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.  உண்மையான வெப்பநிலை இவ்வாறிருக்க உணரக் கூடிய வெப்பநிலை 48 பாகை செல்சியஸ் இனை விட அதிகமாகவிருக்கும்.

பொதுவாக மனித உடல் 40 பாகை செல்சியஸ் இனை விட அதிக வெப்பநிலையை தாங்காது. இது பலருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வெப்பநிலையாகும்.  40 பாகை செல்சியஸ் என்பது வெப்ப வாதத்தை( Heat Stroke) ஏற்படுத்தும் வெப்பநிலையாகும். ஆனால், எதிர்வரும் நாட்களில் 02 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை வெப்பநிலை 40 பாகை செல்சியஸ் இனை விட அதிகமாகவிருக்கும் என்பதால் மக்கள் மிக அவதானமாகவிருப்பது அவசியம் எனவும் குறித்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதது.