கடந்த சில நாட்களாக நிலவிய மழைக்காலநிலை படிப்படியாகக் குறைவடைந்துள்ளதை அடுத்து, ஆறுகளின் நீர்மட்டமும் சீராகக் குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மழை வீழ்ச்சி குறைவடைந்துள்ளமையினால், நாடு முழுவதிலும் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சாதாரண நிலைக்குத் திரும்பிக்கொண்டிருப்பதாக அந்தத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் எல்.எஸ். சூரியபண்டார குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக, தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் எந்தவொரு ஆற்றிலும் வெள்ள அபாயம் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் ஈரவலயப் பகுதிகளில் மாத்திரம் தற்பொழுது சிறிதளவு மழை பெய்து வருவதாகவும், ஏனைய அனைத்துப் பகுதிகளிலும் வறட்சியான வானிலையே காணப்படுவதாகவும் நீர்ப்பாசனப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அடுத்த சில நாட்களிலும் குறைந்தளவிலான மழை வீழ்ச்சியே எதிர்பார்க்கப்படுவதால், வெள்ளப்பெருக்கு அல்லது அது போன்ற எந்தவொரு அனர்த்த அபாயமும் ஏற்பட வாய்ப்பில்லை எனத் தெரிவித்த அவர், எவ்வாறாயினும் எதிர்வரும் வானிலை மாற்றங்கள் குறித்து நீர்ப்பாசனத் திணைக்களம் தொடர்ந்து அவதானத்துடன் கண்காணித்து வருவதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.