அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் மற்றும் நீதித்துறை (திருத்தம்) சட்டமூலம் தொடர்பான பாராளுமன்ற விவாதம் நாளை  24 மற்றும் நாளை மறுதினம் 25 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு, 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் நீதித்துறை (திருத்தம்) சட்டமூலம் தொடர்பான இரண்டாம் வாசிப்பு விவாதத்துக்காக இரு நாட்களிலும் காலை 11.30 மணி முதல் இரவு 7.00 மணி வரை நேரத்தை ஒதுக்கியுள்ளது.இரண்டு நாள் விவாதம் நிறைவடைந்த பின்னர், முன்மொழியப்பட்ட அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான வாக்கெடுப்பு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை 25ஆம் திகதி இரவு 7.00 மணிக்கு நடைபெறவுள்ளது.அதேவேளை, குறித்த சட்டமூலத்தின் அரசியலமைப்புச் சட்டபூர்வத்தன்மை தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் நேற்று (22) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தின்படி, இந்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியமில்லை.பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளின் மூலம் மாத்திரம் இதனை நிறைவேற்ற முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.