எரிபொருள் விநியோக கட்டமைப்பில் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், விவசாயிகளுக்கு தேவையான எரிபொருள் நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்வரும் காலங்களில் நாடு பெரும் உணவு தட்டுப்பாட்டை எதிர்நோக்க நேரிடும் . இந்த நெருக்கடியை வெற்றிக்கொள்ள உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் இலஞ்சம் அல்லது ஊழல் சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அலுவலர்களுக்கும் ஊழியர்களுக்குமான ஊதியம் மற்றும் சேவை நிபந்தனைகளை தீர்மானித்தல் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
சர்வதேசத்தில் இடம்பெறும் யுத்த நிலைமையால் இலங்கை என்னென் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கப் போகின்றதோ தெரியவில்லை. எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பான சூழ்நிலைக்குள் நாடு தள்ளப்படலாம். இந்த நேரத்தில் சிறந்த நடைமுறைத் திட்டங்கள் மூலம் இதில் இருந்து எம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்.இப்போது விவசாயத்துறையில் விதைப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அம்பாறை போன்ற மாவட்டங்களில் விவசாயிகள் இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது நிலத்தை உழும் நடவடிக்கையில் ஈடுபடும் நிலையில் உழவு இயந்திரங்களுக்காக எரிபொருளை எங்கே பெற்றுக்கொள்வது. இவர்களை இந்தப் பிரச்சிகளில் இருந்து பாதுகாக்க வேண்டும். ஒரு வாரத்திற்கு 30 வீட்டரை வழங்கவே தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது அவர்களுக்கு போதுமானது அல்ல. குறைந்தது 75 முதல் 100 லீட்டர் வரையிலாவது நாளொன்று வழங்க வேண்டும். அப்போதே விவசாயத்தை சரியாக செய்ய முடியும். இதனை செய்யாவிட்டால் பாரிய உணவுத் தட்டுப்பாட்டை இந்த அரசாங்கம் எதிர்நோக்க நேரிடலாம்.
இதேவேளை இவர்களுக்காக கூடுதலான நிதியை ஒதுக்கி பசளைகளை இறக்குமதி செய்ய வேண்டும். இல்லையென்றால் உணவு உற்பத்தியில் பெரும் பாதிப்பு ஏற்படலாம். தேவையற்ற விடயங்களுக்காக நிதி ஒதுக்கீடுகளை நிறுத்தி அத்தியாவசிய சேவைகளுக்கு இதனை பயன்படுத்துங்கள்.
மீனவர்களுக்கும் தேவையான எரிபொருள் நிவாரணங்களை வழங்க வேண்டும். இல்லாவிட்டால் மீன் உணவுப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படும். இந்த விடயங்களை சரியாக செய்யாவிட்டால் இதற்கு 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் காரணமாக இருப்பார்கள் என்பதுடன் இதனை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.
விவசாயிகளுக்கு எரிபொருள் நிவாரணம் வழங்காவிடின் உணவு தட்டுப்பாடு ஏற்படும்: கவீந்திரன் கோடீஸ்வரன் எச்சரிக்கை!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space