விநாயகர் சதுர்த்தி: 2 செ.மீ. சந்தன கட்டையில் ‘குழலூதும் கணபதி’ நுண்சிற்பம்
Ad Space
Ad Space
Ad Space
விநாயகர் சதுர்த்திக்கு 2 செ.மீ. சந்தன கட்டையில் ‘குழலூதும் கணபதி’ நுண்சிற்பத்தை செதுக்கி திருமழிசையை சேர்ந்த கலைஞர் டி.கே.பரணி அசத்தியுள்ளார்.திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையை சேர்ந்த தேசிய விருது பெற்ற நுண்சிற்ப கலைஞர் டி.கே.பரணி. இவர் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, சந்தன கட்டையில் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய ‘குழலூதும் ஸ்ரீகணபதி’ சிலையை வியக்கத்தக்க வகையில் வடிவமைத்துள்ளார். கற்பக விருட்ச மரத்தின் கீழ் கணபதி அமர்ந்து புல்லாங்குழல் இசைப்பது போன்ற தோற்றத்தில், வெறும் 20 நாட்களில் இச்சிற்பத்தை தத்ரூபமாக செதுக்கியுள்ளார். இதில் மூலவரான ஸ்ரீகணபதியின் உயரம் வெறும் 2 செ.மீ. மட்டுமே. விநாயகரின் வாகனமான 4 எலிகள் தம்புரா, வயலின், ஜால்ரா, மத்தளம் ஆகிய இசைக் கருவிகளை வாசிப்பது போன்று விநாயகரின் அருகே இடம்பெற்றுள்ளன.இந்த எலி சிலைகள் ஒவ்வொன்றும் வெறும் அரை செ.மீ. அளவில் நுணுக்கமாக உருவாக்கப்பட்டுள்ளது காண்போரை கவர்ந்துள்ளது.கணபதி, எலிகள் மற்றும் கற்பக விருட்ச மரம் அனைத்தும் ஒருங்கிணைந்த இந்த முழுச் சிற்பத்தின் மொத்த உயரம் மூன்றே முக்கால் அங்குலம், அகலம் ஒன்றே முக்கால் அங்குலம் ஆகும். சந்தன கட்டையில் மட்டுமல்லாமல் ஒரு சிறிய அரிசி மணியிலும் சிலைகளை செதுக்கும் அபாரத் திறன் கொண்ட டி.கே.பரணி, முன்னதாக நுண் சிற்ப கலைக்காக குடியரசுத் தலைவரின் தேசிய விருதைப் பெற்றவர் ஆவார். இவரது தாத்தா, தந்தை மற்றும் சகோதரரும் தேசிய விருது பெற்ற கலைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Ad Space
Ad Space
Ad Space