வவுனியா முச்சக்கரவண்டிகளுக்கு மீற்றர் பொருத்தும் பணிகள் முச்சக்கரவண்டிகள் உரிமையாளர் சங்கத்தில் இன்று சனிக்கிழமை (19) ஆரம்பித்து வைக்கப்பட்டது. முச்சக்கரவண்டி சேவையை மேலும் ஒழுங்குபடுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை மூலம் பயணிகளிடம் அறவிடப்படும் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துவதுடன், சாரதிகளுக்கும் பயணிகளுக்கும் இடையில் ஏற்படக்கூடிய கட்டணம் தொடர்பான முரண்பாடுகளையும் குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் பயணிகளின் வசதி கருதி அவசர அழைப்பிற்கான பொலிசாரின் தொலைபேசி இலக்க ஸ்ரிக்கர்களும் ஒட்டப்பட்டது. சங்கத்தின் தலைவர் சி.ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற இவ் ஆரம்பநிகழ்வில், வவுனியா மாநகரசபை முதல்வர் சு.காண்டீபன், சிரேஷ்ட சட்டத்தரணி இ.தயாபரன், வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி யே.எஸ். ரத்னமலலா, ஆகியோர் கலந்துகொண்டு மீற்றர் பொருத்தும் பணிகளை ஆரம்பித்து வைத்தனர். இதன் போது சங்கத்தின் முக்கியஸ்தர்கள்,உறுப்பினர்கள், முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.