வடக்கு அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் நாளை முதல் தொடர் சுகயீன விடுமுறைப் போராட்டம்
Ad Space
Ad Space
Ad Space
வடக்கு மாகாண அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் நிர்வாக மற்றும் சேவை சார்ந்த பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படாத நிலையில், நாளை செவ்வாய்க்கிழமை (15) முதல் தொடர்ச்சியான சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வடக்கு மாகாண அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்றைய தினம் (14) இச்சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.குறித்த அறிக்கையில் உள்ள முக்கிய கோரிக்கைகளாவன : * வடக்கு மாகாணத்தின் புவியியல் நிலைமை, நீண்ட தூரக் களப்பணிகள், பண்ணையாளர்களின் தேவைகள் மற்றும் சேவையின் தன்மைக்கு ஏற்ற பொருத்தமான கடமைப் பட்டியலை வழங்குதல்.* அரச கால்நடை வைத்திய அலுவலகங்களில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறையைத் தீர்த்தல்.* பண்ணையாளர்களின் கால்நடைகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை வழங்குவதற்கான பொருத்தமான மருந்துப் பொறிமுறையை ஏற்படுத்துதல்.* களப்பணிகளுக்கு போதுமான, பொருத்தமான வாகனங்களை வழங்குதல், தற்போது பயன்படுத்தப்படும் வாகனங்கள் பழையதாகவும் அடிக்கடி பழுதடைவதாகவும் இருப்பதால், அதற்குத் தீர்வு காணுதல்.* கால்நடை வைத்தியர்களின் உயர் பதவிகளை நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வுக்குரிய புள்ளியிடல் நடைமுறைகள் சேவைப் பிரமாணக் குறிப்புக்கு முரணாக அடிக்கடி மாற்றப்படுவதைத் தடுத்து, உயர் பதவிகளை உரிய முறையில் நிரப்புதல், அத்துடன் தற்போது வெற்றிடமாக உள்ள பதவிகளை காலம் தாழ்த்தாது நிரப்புதல்.* 2026 ஜூலை 1ஆம் திகதி இடம்பெற்ற சுகயீனப் போராட்டத்தைத் தொடர்ந்து பிரதம செயலாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடல்களில் எட்டப்பட்ட தீர்மானங்கள் மற்றும் இணக்கப்பாடுகளை உடனடியாக நடைமுறைப்படுத்துதல்.* எவ்வித முன்னறிவித்தலுமின்றி தன்னிச்சையாக எமது சம்பளங்களை குறைத்தலை நிறுத்துதல்.* விரல் அடையாளப் பதிவு தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்தல்.நாம் விரல் அடையாளப் பதிவு முறைக்கு எதிரானவர்கள் அல்லர். 2019ஆம் ஆண்டு அன்றைய வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு. பத்திநாதன் அவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல்களின் பின்னர், கால்நடை வைத்தியர்களின் களப்பணியின் தன்மையை கருத்திற்கொண்டு திங்கட்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய நாட்களில் விரல் அடையாளப் பதிவு மேற்கொள்ளும் நடைமுறை ஏற்றுக்கொள்ளப்பட்டு, அது இன்று வரை பின்பற்றப்பட்டு வருகின்றது.எனினும், தற்போது அந்த நடைமுறையைப் புறந்தள்ளி அனைத்து நாட்களிலும் விரல் அடையாளப் பதிவு செய்யவேண்டும் என நிர்வாக அழுத்தம் வழங்கப்படுவதுடன், யாழ்ப்பாண மாவட்டத்தில் கால்நடை வைத்தியர்கள் உண்மையாகக் கடமையாற்றியிருந்தபோதிலும், விரல் அடையாளப் பதிவு இயந்திரத்தில் பதிவு செய்யப்படவில்லை என்ற காரணத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களிலிருந்து பல மாதங்களுக்கான நாட்கள் விடுமுறையாகக் கணிக்கப்பட்டுள்ளன.கால்நடை வைத்தியர்கள் கடமையாற்றியமைக்கான தினக்குறிப்பு பதிவேடு (Diary), எதிர்கால நிகழ்ச்சித் திட்டம் (Advance Programme), விலகல் பதிவுகள் (Deviation), வாகனப் பதிவுகள் (Running Chart), அலுவலக வரவுப் பதிவுகள் (Attendance), திட்டங்களுக்குரிய கொடுப்பனவுச் சீட்டுகள், ஆவணங்கள் மற்றும் வவுச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு உத்தியோகபூர்வ பதிவுகள் உள்ளன.மேலும், நீதிமன்றங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களால் சமர்ப்பிக்கப்படும் சான்றுப் பொருட்கள் தொடர்பான அறிக்கைகள், DCC கூட்டங்கள், பிரதேச ஒருங்கிணைப்புக் கூட்டங்கள், பல்வேறு திணைக்களங்களின் கூட்டங்கள் மற்றும் செயற்பாடுகளில் பங்கேற்று மேற்கொண்ட பணிகள், எமது திணைக்களத்தின் திட்டங்கள் மற்றும் ஏனைய திணைக்களங்களின் திட்டங்களுடன் இணைந்து மேற்கொண்ட பணிகள், அத்துடன் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தமை தொடர்பான உத்தியோகபூர்வ பதிவுகள் உள்ளிட்ட ஏராளமான பணிச்சான்றுகள் எம்மிடம் உள்ளன.இவ்வாறான உத்தியோகபூர்வ பதிவுகள் மற்றும் பணிச்சான்றுகள் மூலம் உண்மையில் கடமையாற்றியமை உறுதிப்படுத்தக்கூடிய நிலையில், விரல் அடையாளப் பதிவு செய்யப்படவில்லை என்ற ஒரே காரணத்தை அடிப்படையாகக் கொண்டு உண்மையில் பணியாற்றிய நாட்களை பல மாதங்களுக்கான விடுமுறையாகக் கணிப்பது நிர்வாக ரீதியாக முரணானதும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாததுமாகும்.அதேவேளை, வடக்கு மாகாணத்தில் உள்ள பல துறைகளில், குறிப்பாக மேலதிக கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ளும் உத்தியோகத்தர்களுக்குக் கூட, அவர்களது பணியின் தன்மைக்கு ஏற்ப விரல் அடையாளப் பதிவு தொடர்பில் பொருத்தமான மாற்று நடைமுறைகள் அல்லது விலக்குகள் நடைமுறையில் உள்ளன. இத்தகைய நிலையில், மேலதிக கொடுப்பனவு எதுவும் பெறாமல், அலுவலக நேரத்துக்கு அப்பாலும் தொடர்ந்து அதிகளவில் களப்பணிகளில் ஈடுபடும் கால்நடை வைத்தியர்களுக்கு மட்டும் அனைத்து நாட்களிலும் விரல் அடையாளப் பதிவு செய்ய வேண்டும் என இந்த நடைமுறையைத் திணிப்பது நியாயமானதல்ல. இது கால்நடை வைத்தியர்களின் தொழில் உரிமை மற்றும் பணியுரிமை சார்ந்த முக்கியமான பிரச்சினையாகும்.எமது போராட்டம் பண்ணையாளர்களுக்கு எதிரானது அல்ல. பண்ணையாளர்களுக்கு தொடர்ச்சியான, விரைவான மற்றும் தரமான கால்நடைச் சேவையை வழங்குவதற்குத் தேவையான சரியான நிர்வாக மற்றும் சேவை ஏற்பாடுகளை உறுதி செய்வதே எமது நோக்கமாகும்.எமது நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்பட்டால், பண்ணையாளர்களின் நலனை முன்னிறுத்தி எமது தொழிற்சங்க நடவடிக்கையை முடிவுக்கு கொண்டுவர நாம் தயாராக உள்ளோம் என அறியத்தருகிறோம் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Ad Space
Ad Space
Ad Space