ராஜபக்ஷ ஆட்சியாளர்களின் ஊழல்களே பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணம் !
Ad Space
Ad Space
Ad Space
இலங்கை எதிர்கொண்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி, டொலர் பற்றாக்குறை மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு என்பவற்றுக்கு முன்னாள் ஆட்சியாளர்களின் ஊழல்களும் முறைகேடான நிர்வாகமுமே முதன்மைக் காரணம் என இடதுசாரி கேந்திர அமைப்பின் செயற்பாட்டாளர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று திங்கட்கிழமை (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய அவர், நாமல் ராஜபக்ஷ தமக்கு எதுவுமே தெரியாது எனப் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதாகச் சாட்டினார்.இருப்பினும், கைதான நபர் ஒருவரின் வாக்குமூலங்கள் மற்றும் கேமன் தீவில் (Cayman Islands) இடம்பெற்ற விருந்தொன்றில் தொழிலதிபர் நிமால் பெரேராவுடன் நாமல் ராஜபக்ஷ இணைந்து இருக்கும் புகைப்படங்கள் ஆகியவை உண்மை நிலையை வெளிப்படுத்துவதாகக் குறிப்பிட்டார்.கப்பம் பெறுபவர்களுடனும் ஊழல்வாதிகளுடனும் கேமன் தீவுகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டது யார் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.தொடர்ந்து உரையாற்றிய அவர், ரணில் விக்ரமசிங்க, மகிந்த ராஜபக்ஷ , சஜித் பிரேமதாச மற்றும் உதய கம்மன்பில போன்ற அரசியல்வாதிகள் வெளிநாட்டு ஒப்பந்தங்களில் பெருமளவு நிதி முறைகேடுகளைச் செய்துவிட்டு, தற்போது ஏதும் அறியாதவர்கள் போல நடிக்கிறார்கள் எனக் குற்றம்சாட்டினார்.சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அறிக்கைகளின்படி, நாட்டிற்காகப் பெறப்பட்ட கடன்களுக்கு இணையான திட்டங்கள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது.எனவே, கடனாகப் பெறப்பட்ட பல மில்லியன் டொலர்களுக்கு என்ன நடந்தது என்பதற்கு இவர்கள் பதிலளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.அத்துடன், ஜே.வி.பி இந்தியாவிற்கு முன் மண்டியிட்டுள்ளதாக விமல் வீரவன்ச கூறுவது அறியாமையாகும் எனத் தெரிவித்த சமீர பெரேரா, நாட்டில் எரிபொருள் வாங்குவதற்குக் கூட டொலர் இல்லாத நிலையை உருவாக்கி, இந்தியாவை நோக்கிச் செல்ல வேண்டிய நிலையை ஏற்படுத்தியது யார் என்றும் கேள்வி எழுப்பினார்.தரமற்ற மற்றும் கழிவு உரக் கப்பல்களை நாட்டிற்குள் கொண்டு வந்து நாட்டின் விவசாயத் துறையை முற்றாக அழித்தது யார் என்பதை விவசாயிகள் நன்கு அறிந்து வைத்துள்ளனர் என்றும், இனிமேலும் அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளை நம்பி ஏமாற அவர்கள் தயார் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.மக்களின் வரிப்பணத்திலும் வெளிநாட்டுக் கடன்களிலும் சுகபோகம் அனுபவித்த இந்த ஆட்சியாளர்கள் செய்த ஊழல்களில் இது ஒரு சிறிய பகுதி மட்டுமே என்றும், தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்தில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி மிக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார் என்றும் அவர் தனது உரையில் மேலும் தெரிவித்தார்.
Ad Space
Ad Space
Ad Space