யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதியில் முன்பகை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் வீதியில் வைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பிரதான சந்தேகநபர் தப்பியோடியுள்ளார்.துன்னாலை பகுதியைச் சேர்ந்த இரு குழுக்களுக்கு இடையே நீண்டகாலமாக நீடித்து வந்த பகைமையின் காரணமாகவே இக் கொலை இடம்பெற்றுள்ளது.துன்னாலை பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இச் சம்பவத்தில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.வடமராட்சி, கிராமக்கோடு சந்திக்கு அருகில் புதன்கிழமை இரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் அடங்கிய குழுவினர் வீதியில் வைத்து இவரை வெட்டிப் கொலை செய்துள்ளனர்.இக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் முல்லைத்தீவில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த பருத்தித்துறை பொலிஸார் மூவரைக் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட மூவரும் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.தப்பியோடியுள்ள பிரதான சந்தேகநபரை உடனடியாகக் கைது செய்வதற்காகப் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.