கிரிபத்கொட நகரில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள அரச நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் கையகப்படுத்த முயன்ற வழக்கில் முன்னாள் அமைச்சர்களான மேர்வின் சில்வா மற்றும் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றப்பத்திரிகை நேற்று முன்தினம் கம்பஹா மேல் நீதிமன்றத்தினால் கையளிக்கப்பட்டது.
கிரிபத்கொட நகரில் அமைந்துள்ள அரசாங்கத்திற்குச் சொந்தமான பல கோடி ரூபா பெறுமதியான காணியை, போலி ஆவணங்கள் மூலம் கையகப்படுத்த முயன்ற சம்பவம் தொடர்பிலான, மோசடி குறித்து 2023 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் கிரிபத்கொட பிரதேச சிவில் அமைப்பினர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடளித்திருந்தனர்.
கிரிபத்கொட நகரின் மையப்பகுதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான 40 பேர்ச்ஸக்கும் அதிகமான காணியை, 1980 களில் எழுதப்பட்டதைப் போன்றதொரு போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்து, அதனைத் தனிப்பட்ட தரப்புக்குச் சொந்தமானது எனக் காண்பிக்க பிரதிவாதிகள் முயற்சித்துள்ளனர்.
இதன்போது காணிப் படிவத்தில் இருந்த பழைய ஆவணக் கோப்புகளும் மோசடியான முறையில் மாற்றப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்தது. இந்தச் சம்பவம் தொடர்பில் 2025 மார்ச் 5 ஆம் திகதி மேர்வின் சில்வா குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார்.
அதன் பின்னர் பிரசன்ன ரணவீரவைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், அவர் விசாரணைகளைத் தவிர்த்துத் தலைமறைவாக இருந்தார்.
மேர்வின் சில்வாவினால் முன்னெடுக்கப்பட்ட இந்த காணி கொடுக்கல் வாங்கலுக்கு, அப்போதைய பிரதேச சபை தலைவராக இருந்தோடு, குற்றச்செயலுக்கு உடந்தையாக இருந்தமை மற்றும் போலி ஆவணங்களை உறுதிப்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுகள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மீது சுமத்தப்பட்டுள்ளன.
நீதிமன்றத்தைப் புறக்கணித்து சுமார் ஒரு மாத காலம் தலைமறைவாக இருந்த பிரசன்ன ரணவீர, பின்னர் 2025 மே 7 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையானார். களனி பிரதேச சபைக்குச் சொந்தமான 0.2137 ஹெக்டேயர் காணிக்கு போலி ஆவணங்களைத் தயாரித்து 75 மில்லியன் ரூபாயை மோசடி செய்தமை தொடர்பில் பிரதிவாதிகளுக்கு எதிராக சாட்சியங்கள் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
நீதிவான் நீதிமன்றில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் விடயங்களை முன் வைக்கையில், காணிப் பதிவகத்தில் உள்ள புத்தகங்களில் இருந்த மூலப் பக்கங்களைக் கிழித்து அகற்றிவிட்டு, போலியாகத் தயாரித்த பக்கங்களை ஒட்டியதன் மூலமே இந்த மோசடி இடம்பெற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
காணியின் எல்லைகளை நிர்ணயிக்கும் போது அரசாங்க நில அளவையாளர்களுக்கு அரசியல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதற்கான சாட்சியங்கள் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
பிரதிவாதிகளுக்கு குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் அனைவரினதும் வெளிநாட்டுப் பயணங்களுக்கு நீதிமன்றம் தடை விதித்ததுடன், அவர்களது கடவுச்சீட்டுகளை உடனடியாக நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டது.
மேலும், தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான மேலதிக சரீரப் பிணையில் அவர்களை விடுவிக்கவும் நீதிமன்றம் இதன்போது உத்தரவு பிறப்பித்திருந்தது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான மேர்வின் சில்வா மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோருக்கு மேலதிகமாக, நவீன் வீரகோன், களனி பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் வைத்தியர் ஜயந்த சிங்ஹபா{ஹ கப்ரால், களனி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் மில்ரோய் பெரேரா மற்றும் மேர்வின் சில்வாவின் பாராளுமன்ற விவகார முன்னாள் செயலாளர் சரத் குமார எதிரிசிங்க (சிங்கப்பூர் சரத்) ஆகியோருக்கும் இதன்போது குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டது.
பிரதிவாதிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான நெவில் அபேரத்ன, நலின் திஸாநாயக்க, அனில் த சில்வா ஆகியோருடன் சட்டத்தரணிகளான சமீர பண்டாரதிலக்க, அரவிந்த சில்வா மற்றும் பண்டுல சந்தருவன் ஆகியோர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.
மேர்வின் சில்வா, பிரசன்ன ரணவீர உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space