மனித உரிமை ஆணைய அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த மாற்றுத் திறனாளி இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விருதுநகரைச் சேர்ந்தவர் ஆல்பர்ட் (30).
மாற்றுத் திறனாளியான இவர் சென்னை வேளச்சேரி வெங்கடேஸ்வரா நகர், 2-வது மெயின் ரோடு பகுதியில் தங்கி ஆட்டோ ஓட்டி வந்தார். இவர் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் மனு அளிப்பதற்காக நேற்று முன்தினம் சென்றார்.
அப்போது, அங்கு அவர் திடீரென தீக்குளித்தார். அங்கு பணியில் இருந்த போலீஸார் தீயை அணைத்து உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், ஆல்பர்ட் நேற்று உயிரிழந்தார்.
காவல் துறை கொடுத்த நெருக்கடி: ஆல்பர்ட் மீது 2 மாதங்களுக்கு முன்பு, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிகுருலட்சமி என்ற பெண் அங்குள்ள சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
அதில், ஆல்பர்ட்டுடன் வர்த்தக முதலீடு செய்வதற்கு ரூ.1.75 லட்சம் கொடுத்ததாகவும், அதை அவர் திருப்பித் தரவில்லை எனவும் புகார் தெரிவித்திருந்தார். இந்த பணத்தை 27.01.2026 அன்று திருப்பி வழங்குவதாக உறுதியளித்து ஆல்பர்ட் எழுதிக் கொடுத்திருந்தார்.
ஆனால், குறிப்பிட்ட தேதிக்குள் பணத்தை திருப்பி வழங்கவில்லை. எனவே இந்த விவகாரம் தொடர்பாக போலீஸார் கொடுத்த நெருக்கடியே ஆல்பர்ட் இறப்புக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அபிராமபுரம் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
மனித உரிமை ஆணைய அலுவலகத்தில் தீக்குளித்த மாற்றுத் திறனாளி இளைஞர் உயிரிழப்பு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space