காரைதீவு பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் மனிதப் பாவனைக்கு உதவாத பழங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் குறித்த பொருட்கள் உடனடியாக அகற்றப்பட்டுள்ளன.காரைதீவு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட சந்தை மற்றும் வியாபார நிலையங்களில் பொதுமக்களின் சுகாதாரத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தரமற்ற பழங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுcவதாக பிரதேச சபைக்கு முறைப்பாடுகள் கிடைத்தன.இது தொடர்பில் உடனடி கவனம் செலுத்திய தவிசாளர், சம்பந்தப்பட்ட சுகாதார மற்றும் பிரதேச சபை அதிகாரிகளை ஒருங்கிணைத்து கள விஜயம் மேற்கொண்டு சோதனைகளை முன்னெடுத்தார்.இதன்போது, மனிதப் பாவனைக்கு உதவாத நிலையில் காணப்பட்ட பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களைக் கண்டறிந்த அதிகாரிகள், சம்பந்தப்பட்ட வியாபாரிகளைக் கொண்டே அவற்றை உடனடியாக அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.பொதுமக்களின் சுகாதாரத்தையும் உணவுப் பாதுகாப்பையும் உறுதிசெய்வது தங்களின் முதன்மைப் பொறுப்பு எனக் குறிப்பிட்டுள்ள பிரதேச சபை நிர்வாகம், மனிதப் பாவனைக்கு உகந்ததற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இவ்வாறான தவறுகள் குறித்துக் கிடைக்கும் முறைப்பாடுகளுக்கு உடனடியாக தீர்வு காணப்படும் எனவும் எச்சரித்துள்ளது.மேலும், பொதுமக்கள் தங்களது சுகாதாரத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையிலான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை அவதானித்தால், அது குறித்து உடனடியாக உரிய அதிகாரிகளுக்கு அறியத்தர வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.