மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இலவச தரிசனம் செப். 23 வரை நீட்டிப்பு
Ad Space
Ad Space
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கை ஒட்டி பக்தர்களின் வருகை அதிகரித்து வருவதால் இலவச தரிசனம் செப். 23 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சங்க காலம் முதல் இருந்து வரும் பிரசித்திபெற்ற கோயிலாகும். ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடத்த வேண்டும். கடந்த 2009 ஏப்.8-ம் தேதி நடந்தது. அதன்படி 2021-ம் ஆண்டு குடமுழுக்கு நடத்த கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடானது.2018-ம் ஆண்டு பிப்.2-ம் தேதி வீர வசந்தராயர் மண்டபத்திலுள்ள கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் மண்டபம் முழுவதும் சேதமடைந்தது. பின்பு வீர வசந்தராயர் மண்டபப் பணிகளை சீரமைத்து குடமுழுக்கு விழா நடத்த அப்போதைய திமுக ஆட்சியில் முடிவெடுக்கப்பட்டது.ரூ.35 கோடியில் வீர வசந்தராயர் மண்டப சீரமைப்புப் பணிகள் கடந்த ஆக.30-ல் நிறைவடைந்து, மண்டபம் திறக்கப்பட்டது. வீர வசந்தராயர் மண்டபப் பணிக்காக 8 ஆண்டுகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்த கிழக்கு கோபுர வாசலும் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.இதையடுத்து, குடமுழுக்குப் பணிகள் தொடங்கின. வடக்காடி வீதியில் யாகசாலை பூஜைகளுக்காக 184 குண்டங்கள் அமைக்கப்பட்டன. செப்.6-ல் பூர்வாங்க பூஜைகள் தொடங்கின. பின்பு செப்.11-ம் தேதி மாலையிலிருந்து முதல்கால யாகசாலை பூஜை தொடங்கியது. மூலவர் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சுவாமிக்கு மருந்து சாற்றும் வைபவத்தையொட்டி செப்.11 முதல் 16-ம் தேதி வரை மூலவர் சந்நிதிகள் அடைக்கப்பட்டன.செப்.16-ம் தேதி காலை 5 மணியளவில் பத்தாம் கால யாக வேள்வி முடிந்து கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. காலை 6 மணிக்குள் தெட்சிணாமூர்த்தி, துர்க்கை, லெட்சுமி, பத்திரகாளி, 63 நாயன்மார்கள் மற்றும் சுற்றுக்கொடி மரங்கள் உட்பட 414 பரிவார தெய்வங்களுக்கு நேற்று குடமுழுக்கு விழா நடைபெற்றது.காலை 7.40 மணியளவில் மீனாட்சி, சுந்தரேசுவரர் சந்நிதிகளின் தங்க விமானங்கள் மற்றும் ராஜகோபுர கலசங்களுக்கு ஒரே நேரத்தில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. 7.55 மணிக்கு மூலவர் மீனாட்சி அம்மனுக்கு குடமுழுக்கும், காலை 8.10 மணிக்கு மூலவர் சுந்தரேசுவரர் சுவாமிக்கு குடமுழுக்கும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இன்று வரை பக்தர்கள் இலவச தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், குடமுழுக்கு நடந்ததை ஒட்டி மீனாட்சியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். இதையடுத்து இலவச தரிசன காலத்தை செப்.23 வரை நீட்டித்து கோயில் நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.
Ad Space
Ad Space