தவெக தலைமையிலான கூட்டணிக்கு ‘மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.தவெக ஆதரவு கட்சிகளின் 2-வது ஆலோசனைக் கூட்டம், பனையூரில் இன்று நடைபெற்றது. தவெக தலைவரும், முதல்வருமான விஜய் தலைமையில் பனையூர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், மதிமுக ஆகிய கட்சிகள் பங்கேற்றன.சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் விஜய், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களிடம் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தார். இக்கூட்டத்தில், கூட்டணியின் பெயர், ஒருங்கிணைப்பாளர் தேர்வு, ஒருங்கிணைப்புக் குழு என்பன குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.தற்போது 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாகவும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.இன்று நடைபெற்ற கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக்குப் பின்னர் தவெக தலைமையிலான கூட்டணிக்கு ‘மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி’ என பெயர் சூட்டப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த முறை ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காத இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இந்த முறையும் நேரில் சென்று அழைப்பு விடுத்திருந்தனர். ஆனால், இந்த முறையும் தாங்கள் தவெக தலைமையிலான ஆதரவு கட்சிகளுடனான கூட்டத்தில் பங்கேற்கவில்லை என கம்யூனிஸ்ட் கட்சிகள் தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.மாணிக்கம் தாகூர் கூறியது என்ன?தவெக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், “இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் எங்கள் கூட்டணிக்கு ‘மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி’ என பெயரிடப்பட்டது. இது மிகவும் பலமான கூட்டணியாக இருக்கும். நடைபெறவுள்ள 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு ‘மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி’யின் வேட்பாளர்கள் நாளை அறிவிக்கப்படுவார்கள்.சமூக நீதி, மதசார்பின்மையின் அடிப்படையில் தமிழகத்தின் நன்மைக்காக இந்தக் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. நேர்மையான ஆட்சி தமிழகத்தில் தொடர நாங்கள் இக்கூட்டணிக்கு ஆதரவு தருகிறோம். ‘மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி’யின் தலைவராக முதல்வர் விஜய்யை நாங்கள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டோம். அவரின் ஒருங்கிணைப்பில் இந்தக் கூட்டணியை உருவாக்கியுள்ளோம். இந்தக் கூட்டணி விஜய் தலைமையில் தமிழகத்திலும், புதுச்சேரியிலும் செயல்படும்.‘மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி’ என்பது இண்டியா கூட்டணியின் ஒரு பகுதி. இண்டியா கூட்டணி மக்களவைத் தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி. 2029-ல் மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்படும் போது இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார். அப்போது இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளருக்காக முதல்வர் விஜய் பிரச்சாரம் செய்வார்.காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான். அதே நேரத்தில் இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளரை, அந்தக் கூட்டணி கட்சிகள் முடிவு செய்யும். இண்டியா கூட்டணி வேட்பாளரை ‘மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி’ ஏற்றுக்கொள்ளும்” என்றார்.