டுபாயிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட, பெருளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் 'ஷிரான் பாசிக்' என்பவரின் தந்தையான அப்துல் ரசாக் மொஹமட் பாசிக் என்பவர் எதிர்வரும் செப்டம்பர் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.சந்தேகநபர் இன்று (12) கொழும்பு புதுக்கடை இலக்கம் 3 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே நீதவான் இக் கட்டளையைப் பிறப்பித்துள்ளார். மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை  (11) இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.ஷிரான் பாசிக் போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக உழைத்ததாகக் கூறப்படும் 3 கோடி ரூபா பணத்தைப் பயன்படுத்தி, கம்பஹா பகுதியில் உள்ள சொகுசு வீடொன்றைத் தனது பெயரில் கொள்முதல் செய்தமை தொடர்பிலான விசாரணைகளின் அடிப்படையில் இக் கைது இடம்பெற்றுள்ளது.பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளால் இக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.மேலும், இச் சம்பவம் தொடர்பில் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு  வருகின்றனர்.