இந்தியாவின் ஆந்திர மாநிலம், நரசராவ்பேட்டை பகுதியைச் சேர்ந்த 33 வயதான பெண் ஒருவரின் வயிற்றில் இருந்து 13 பேனாக்கள், 5 மரக் கரண்டிகள் மற்றும் ஒரு மெழுகுவர்த்தி என்பன அறுவை சிகிச்சையின் மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளன.மார்புப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான வலி காரணமாக மாதாஸ்ரீ தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அப்பெண்ணிற்கு மேற்கொள்ளப்பட்ட எண்டோஸ்கோபி மற்றும் சி.டி ஸ்கேன் பரிசோதனைகளில் இப் பொருட்கள் வயிற்றுக்குள் இருப்பது கண்டறியப்பட்டது. வைத்தியர் ராமச்சந்திர ரெட்டி தலைமையிலான குழுவினர் எண்டோஸ்கோபி மற்றும் லேப்ராஸ்கோபி  சிகிச்சை முறைகளைப் பயன்படுத்திப் வயிற்றிலிருந்த அனைத்துப் பொருட்களையும் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். வயிற்றுக்குள் இருந்த 25 சென்டிமீட்டர் நீளமுள்ள பேனா ஒன்றினால் வயிற்றுப் பகுதியில் துளை ஏற்பட்டு, 'நியூமோமீடியாஸ்டினம்' என்ற நோய் நிலை உருவாகியுள்ளது. தந்தையுடன் ஏற்பட்ட கோபத்தில் அப்பெண் இவற்றை விழுங்கியுள்ளதுடன், அவர் கடுமையான மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.இதற்கு முன்னரும் அவர் 4 பேனாக்களை விழுங்கி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர் மனநல வைத்தியரிடம் சிகிச்சைக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். பொதுவாக மனநலப் பாதிப்பு, கடுமையான மன அழுத்தம் அல்லது போதை மறுவாழ்வு மையங்களில் உள்ளவர்களே தமக்குத் தாமே தீங்கு விளைவித்துக்கொள்ளும் நோக்கில் கூர்மையான பொருட்கள், கரண்டிகள் மற்றும் பேனாக்கள் போன்றவற்றை விழுங்குவதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.கூர்மையான பொருட்கள் குடலில் துளையை ஏற்படுத்தினால் 'செப்டிக் ஷாக்'  எனும் ஆபத்தான தொற்று ஏற்பட்டு உயிரிழப்பு நிகழக்கூடும்.உலகளவில் இதுபோன்ற சம்பவங்கள் அரிதாக இடம்பெற்று வரும் நிலையில், 2024 ஆம் ஆண்டு ஈரானில் நபர் ஒருவரின் வயிற்றில் இருந்து 450 க்கும் மேற்பட்ட உலோகப் பொருட்களும், 2025 இல் இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் 29 ஸ்டீல் கரண்டிகளும் அகற்றப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.