ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச மற்றும் ராஜபக்‌ஷ குடும்பத்தினர் உள்ளிட்ட தரப்பினர் நாட்டின் பிரபுத்துவ அரசியல் கட்டமைப்பையே பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். தற்போதைய அரசியல் சூழ்நிலையில் மக்களின் அபிலாஷைகளையும் ஜனநாயக உரிமைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய எதிர்க்கட்சி ஒன்று உருவாக்கப்படவேண்டும் என ஜன பலய அமைப்பு சுட்டிக்காட்டியது.கொழும்பில் நேற்று புதன்கிழமை (9) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அந்த அமைப்பின் செயற்குழு உறுப்பினர் விதர்ஷன கண்ணங்கர மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,நாமல் ராஜபக்‌ஷ கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் ராஜபக்‌ஷ தரப்பினரால் மக்கள் கூட்டமொன்று நடத்த ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. அதேவேளை, தேசிய மக்கள் சக்தியினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் மக்கள் கூட்டத் தொடரும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இந்த சூழ்நிலையில், ராஜபக்‌ஷ தரப்பினருக்கு எதிராக விசாரணைகள் மற்றும் கைது நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதுடன், ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியினர் ராஜபக்‌ஷ தரப்பினரை பாதுகாக்கும் வகையில் வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருகின்றனர். ஐக்கிய மக்கள் சக்தியும் கைது நடவடிக்கைகளின் தன்மை தொடர்பில் அவ்வப்போது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றது.இதன் மூலம் மக்கள் போராட்டத்துக்குப் பின்னர் உருவான அரசியல் பிரிவுக் கோடு மீண்டும் தெளிவடைந்து வருகின்றது. ராஜபக்‌ஷக்களுக்கும் ரணில் விக்கிரமசிங்க தரப்பினருக்கும் இடையில் அடிப்படை அரசியல் வேறுபாடு கிடையாது. இரு தரப்பினரும் பிரபுத்துவ ஆளும் வர்க்கத்தின் வெவ்வேறு முகங்களாகவே உள்ளனர். அதேபோன்று சஜித் பிரேமதாசவும் இந்தப் பிரபுத்துவ அரசியல் கட்டமைப்பிலிருந்து வேறுபட்டவர் அல்ல. ரணில் விக்கிரமசிங்க, ராஜபக்‌ஷக்கள் மற்றும் சஜித் பிரேமதாச உள்ளிட்ட தரப்பினர் ஒரே அரசியல் கட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.மக்கள் போராட்டத்தின் முக்கியமான கோரிக்கைகளில் ஒன்று நாட்டின் செல்வத்தை கொள்ளையடித்ததாகக் கூறப்படும் ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து, தேசிய செல்வத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பதாகும். எனவே, தற்போதைய சட்ட நடவடிக்கைகளை அரசியல் பழிவாங்கல் என கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.நாமல் ராஜபக்‌ஷ தொடர்பான விசாரணைகளில் வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் அவற்றின் பிரதிநிதிகளிடமிருந்து தகவல்கள் மற்றும் சாட்சியங்கள் பெறப்பட்டு வருகின்றன. ஆகவே, இவை அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அல்ல. கடந்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அரசாங்கம் ஊழல்வாதிகளை கைது செய்வது மாத்திரமன்றி, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்கக்கூடிய சட்ட மற்றும் நிறுவன கட்டமைப்புகளையும் மறுசீரமைக்க வேண்டும். மக்களின் ஜனநாயக உரிமைகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும்.தற்போதுள்ள எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதன் மூலம் புதிய எதிர்க்கட்சியை உருவாக்க முடியாது. மக்களின் உரிமைகள், ஜனநாயகம் மற்றும் மக்கள் அபிலாஷைகளை உண்மையாக பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய அரசியல் உரையாடலின் ஊடாகவே புதிய எதிர்க்கட்சி உருவாக வேண்டும். இதற்கான அரசியல் தளத்தை உருவாக்குவதே ஜன பலய அமைப்பின் நோக்கமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.