பிரிக்ஸ் கூட்டமைப்பின் 18 ஆவது உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று வெள்ளிக்கிழமை (11) காலை டெல்லியை சென்றடைந்துள்ளார். புட்டினுடன் உயர்மட்டக் குழுவினர் சென்றுள்ளனர்.டெல்லி விமான நிலையத்தில் புட்டின் மற்றும் உயர்மட்டக் குழுவினரை இந்திய வெளிவிவகார இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் வரவேற்றுள்ளார்.ரஷ்ய ஜனாதிபதியை வரவேற்ற வெளிவிவகார ஊடகப் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், இந்தியாவும் ரஷ்யாவும் சிறப்பு மற்றும் முன்னுரிமை வாய்ந்த மூலோபாயக் கூட்டாண்மையின் அடிப்படையில் பல பரிமாண மற்றும் நீண்டகால உறவுகளைக் கொண்டுள்ளன எனத் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையே 'சிறப்பு மற்றும் முன்னுரிமை வாய்ந்த உத்திசார் கூட்டாண்மை'யின் அடிப்படையில் பல பரிமாணங்களைக் கொண்ட நீண்டகால உறவுகள் நிலவுவதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தனது சமூக ஊடகப் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளது.இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், ரஷ்ய ஜனாதிபதி புட்டினும் வெள்ளிக்கிழமை பிற்பகல் விரிவான இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் உக்ரேன் போர் ஆரம்பித்த பின்னர், ரஷ்யாவுக்கு வெளியே நடைபெறும் பிரிக்ஸ் கூட்டமைப்பு உச்சிமாநாட்டில் புட்டின் நேரில் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆபிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, இந்தோனேசியா ஆகிய 11 முக்கிய பொருளாதார நாடுகள் அங்கம் வகிக்கும் சனிக்கிழமை (12) ஆரம்பிக்கும் இரண்டு நாள் பிரிக்ஸ் கூட்டமைப்பின் உச்சிமாநாட்டிற்கு 04 ஆவது முறையாக இந்தியா தலைமை வகிக்கிறது.